நிதி மற்றும் மனித வளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராகவும் இருந்து வருகிறார். ஒரு முக்கியமான துறை அமைச்சராக இருந்த காரணத்தால் தற்போது அமைச்சர், ஐடி பிரிவு செயலாளர் பதவியை கைவிட்டார்.
“நிதித்துறை’ அமைச்சரின் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்கிறது. கூடுதலாக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் உள்ளது. கடந்த வாரம், கட்சிப் பதவியை விட்டுக்கொடுக்கும் எண்ணம் குறித்து தலைமைக்கு பி.டி.ஆர் தெரிவித்ததுடன், தலைமையும் அவரது முடிவுக்கு உடன்படத் தொடங்கியது” என்று திமுகவின் பல வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, வெளியேறும் ஐடி பிரிவு செயலாளரின் ஆலோசனையைப் பரிசீலித்த பிறகு, மன்னார்குடி தொகுதியில் இருந்து 3 முறை எம்எல்ஏவாக இருந்த டிஆர்பி ராஜாவிடம் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பை ஒப்படைக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் திமுக தரப்பிலிருந்து வெளியாகும் எனத் தெரிகிறது. ஆனால் இதுகுறித்து, பழனிவேல் தியாக ராஜனோ அல்லது டிஆர்பி ராஜாவோ இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
2014 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஐடி பிரிவை முறையாக துவக்கியது எதிர்க்கட்சியான அதிமுக தான். 2014 மக்களவை மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது, அது இரண்டாவது முறையாக மாநிலத்தை தக்கவைத்தபோது, தகவல் தொழில்நுட்ப பிரிவின் பிரச்சார உத்தி ஓரளவுக்கு காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அதைத் தொடர்ந்து தி.மு.க.வும் 2017 ஜூலையில்’ தனது சொந்த தகவல் தொழில்நுட்ப பிரிவை உருவாக்கி, முன்னாள் சர்வதேச வங்கியாளரும், இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்த தியாகராஜனிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தது. அதன் பின்னர் தகவல் தொழில்நுட்ப பிரிவை கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரிவாக அறிவித்து இறுதியில், கடந்த ஆண்டு மத்தியில் திமுக ஆட்சிக்கு வந்தது.
நிதியமைச்சர் தனது அரசு தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்ட போதிலும், ஐ.டி. பிரிவானது, பிரச்சினைகளை எதிர்கொள்வதில் எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை இன்னும் இழக்காத அளவுக்கு செயலற்ற நிலையில் இருந்தது.
இதன் காரணமாகவே, பழனிவேல் தியாகராஜன் தனது கட்சியின் ஐடி பிரிவு செயலாளர் பதவியே கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“