வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க மூத்த நிர்வாகியான பொன்முடி மீது 2 சொத்து குவிப்பு வழக்குகள் உள்ளன. அதில் வருமானத்திற்கு அதிகமாக ரூ 1.75 கோடி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட ஒரு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்து இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து 2017-ல் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
செவ்வாய்க் கிழமை (டிச.19) ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்து, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை குற்றவாளி என அறிவித்தார். தண்டனை விவரம் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சைதாப்பேட்டையில் அமைந்துள்ள தங்களது இல்லத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் கோர்ட்டுக்கு புறப்பட்டனர். பொன்முடி வழக்கமாக பயன்படுத்தும் காரை தவிர்த்து விட்டு தேசியக்கொடி இல்லாத வேறொரு காரில் நீதிமன்றம் வந்தார். காலை 10:40 மணியளவில் இந்த வழக்கில் தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும் ரூ 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக வயதையும் உடல் நலனையும் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என பொன்முடி தரப்பில் வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ வாதிட்டார். தண்டனையை குறைக்கும்படி பொன்முடியில் மனைவி விசாலாட்சியும் கோரிக்கை வைத்தார். அப்போது, 'உச்ச நீதிமன்றத்தில் உங்கள் கோரிக்கையை தெரிவியுங்கள்' என நீதிபதி குறிப்பிட்டார். உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பு அப்பீல் செய்ய வசதியாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
எனினும் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அன்றே பொன்முடி இழந்துவிட்டார். தற்போது மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் பொன்முடி உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை. இந்த வழக்கில் நிவாரணம் கோரி அவர் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம்.
30 நாட்களில் உச்சநீதிமன்றம் அவரது மேல் முறையீடை ஏற்று ஐகோர்ட் தீர்ப்பை நிறுத்தி வைத்தால் ராகுல் காந்தி மீண்டும் எம்பி பதவி பெற்றது போல் பொன்முடியும் மீண்டும் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை பெற வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே சமயம் தண்டனை மட்டும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டால் சிறை செல்வதை பொன்முடி தவிர்க்கலாம். அடுத்த கட்டமாக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் நகர்வை பொறுத்து பொன்முடியின் அரசியல் எதிர்காலம் இருக்கும்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.