வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளையில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்குமான தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொன்முடி மீது மொத்தம் 2 சொத்து குவிப்பு வழக்குகள் போடப்பட்டன. இதில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது 2006-2011 கால கட்டத்தில் அமைச்சராக இருந்த போது சொத்து குவித்த வழக்கு.
இதில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்த மற்றொரு சொத்து குவிப்பு வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.
1996-2001 வரை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக மனைவி, மகன்கள் பெயரில் சொத்துகளை வாங்கி குவித்தார் என 2002-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஐபிசி 109, 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் 13(1)(e), 13(2) பிரிவுகள் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பொன்முடி, மனைவி விசாலாட்சி, மாமியார் சரஸ்வதி, பொன்முடியின் நண்பர்கள் ஏ. மணிவண்ணன், ஏ. நந்தகோபால் சேர்க்கப்பட்டனர்.
இதில், இடைப்பட்ட ஆண்டுகளில், மாமியார் சரஸ்வதி பொன்முடியின் நண்பர் நந்தகோபால் ஆகியோர் இறந்துவிட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடி உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக அறிவித்தார்.
அப்போது பொன்முடி வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பது ஏன் என்பது தொடர்பாக 18 பக்க உத்தரவையும் நீதிபதி பிறப்பித்திருந்தார்.
அதில், தாம் பார்த்ததிலேயே மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்ட வழக்கு என்பதாலேயே, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமது விடுதலைக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு தொடர்ந்தார். ஆனால் பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பணியை முடித்துவிட்டு இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் விசாரிப்பார்.
நீதிபதிகள் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்குகளை வேறு ஒரு நீதிபதி விசாரிக்க முடியாது. ஆகையால் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் பொன்முடி மீதான 2002 ஆம் ஆண்டு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குவார். 2006-2011 ஆம் ஆண்டு காலத்துக்கான சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து என்ன தீர்ப்பு வழங்குவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.