மத்திய பா.ஜ.க அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது. பள்ளி, கல்லூரிகளில் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. இதற்கு தி.மு.க உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது நவீன குலக்கல்வித் திட்டம், மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்பு என விமர்சனம் செய்தனர். தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த போதும் விமர்சனம் செய்தது. ஆட்சிக்கு வந்தபின்னும் இதை எதிர்த்தது.
தமிழ்நாட்டிற்கு என மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும் என அறிவித்தது. அதன்படி ஆட்சிக்கு வந்ததும் மாநில கல்விக் கொள்கையை வகுக்க கல்வித்துறை நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் நல்ல அம்சங்களை நாம் எடுத்துக் கொள்ளலாம் அதில் எந்தவொரு தவறும் இல்லை. புதிய கல்விக் கொள்கையில் சிலவற்றை எடுத்துக் கொள்ளலாம். மாநில கல்விக் கொள்கை பாதிக்கப்படாமல் ஆய்வு செய்து மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக் கொள்ளலாம். அனைவரும் தங்கள் தாய் மொழியில் கல்வியை கற்ற வேண்டும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் கூறி வருகிறார். இதனை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதல்படி மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. மாநிலக் கல்விக் கொள்கை அனைத்து அம்சங்களையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை சிறப்பானதாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. விரைவில் மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” எனக் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil