மதுரையில் ஐரவாதநல்லூரில் நடைபெறும் தகவல் தொழில்நுட்ப அணி ஆய்வுக்கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வருகை புரிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியினர் தவறான தகவல்களை பரப்புவதாக குற்றச்சாட்டு உள்ளதே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "திமுக தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை கொண்டு செல்வதற்கு எங்களுக்கு நேரமில்லை, நாள்தோறும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார்கள், அதையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்வதற்கு எங்களிடம் நேரமில்லை அப்புறம் எப்படி அவதூறு செய்திகளை பரப்புவோம்" என பதிலளித்தார்,
மதுரை டைட்டல் பார்க் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "மதுரை டைட்டல் பார்க் கட்டுவதற்காக டெண்டர் பணிகள் முடிவுற்றது, விரைவில் சங்கம் வளர்த்த மதுரையில் மிக பிரம்மாண்டமாக டைட்டல் பார்க் கட்டப்படும்" என்று கூறினார்.
தொடர்ந்து அவரிடம், '2026 இல் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறாரே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு "முதலில் அவரை தூக்கத்தில் இருந்து எழுந்திருக்க சொல்லுங்கள்" என்று அவர் பதிலளித்தார்.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“