நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மற்றும் தருமபுரியில் திமுகவின் வெற்றியை அந்த மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் முகாமிட்டு நிர்வாகிகளைச் சந்தித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். அமைச்சர்கள் கட்சியில் உள்ளுர் நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவருக்கும் ஆட்சியின் மீதான நம்பிக்கை அளித்து இந்த வெற்றியை சாத்தியப்படுத்தினார்கள்.
அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை கண்காணிப்பதற்கு துரிதப்படுத்துவதற்கும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அமைச்சர் என்று அனைத்து மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சரை நியமித்தார். அமைச்சர்கள், தங்கள் மாவட்டங்களில் வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைக் கைப்பற்றினாலும், கோவை, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் தோல்வியடைந்தன. கோவையில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக இடங்களில்கூட வெற்றி பெறவில்லை. அதனால், இந்த கோவை, சேலம், தருமபுரி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் அமைச்சர்களும் நோக்கமாக உள்ளனர்.
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் விவசாய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அமைச்சர்களும் தங்கள் இலாகாவிற்கும், தாங்கள் பொறுப்பேற்றுள்ள மாவட்டத்திற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின், மின்சாரத் துறை அமைச்சரின் திறமையை மேடையிலேயே பாராட்டினார். செந்தில் பாலாஜி கோவைக்கான தனது திட்டங்களைப் பற்றி கூறினார். வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மும்முரமாக சுற்றுப்பயணம் செய்து வரும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கடந்த சில நாட்களுக்கு முன்பு தருமபுரியில் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலமாக உள்ள எஸ்.பி.வேலுமணியின் கோயம்புத்தூரிலும், கே.பி.அன்பழகனின் தருமபுரியிலும் திமுக மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கான பணியை திமுக தலைமை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
“கோவையில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களைத் தவிர, திமுகவை பலப்படுத்த வேண்டும் என்பது முதல்வர் மு.க.ஸ்டாலினின் நோக்கம் ஆகும். முதல்வர் தனது பயணத்தின்போது உள்ளாட்சித் தேர்தல் திட்டங்கள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் உள்ளூர் நிர்வாகிகளுடன் சுருக்கமாக விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டது. வேலுமணியின் உத்தியை முறியடித்து அங்கே திமுக உள்ளூர் சமூக ஆதரவைப் பெற அமைச்சர் செந்தில்பாலாஜியை கோவையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தருமபுரியில் பலமாக உள்ள பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளில் இருந்து அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளைக் கண்டறிந்து அவர்களை திமுகவை நோக்கி இழுக்க தர்மபுரியில் உள்ள திமுக மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவுறுத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ள தருமபுரி மாவட்டத்தில் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள், அமமுகவில் இருந்து விலகிய அதிமுக முன்னாள் அமைச்சர் பழனியப்பனுடன் இணைந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தியதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்மூலம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவிய கோவை, தருமபுரி மாவட்டங்களில் வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அனைத்து இடங்களையும் வெற்றி பெற வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி, பன்னீர்செல்வம் முகாமிட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.