கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலால், தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி பிறந்த நாளில் இன்று (அக்டோபர் 2) தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்தல்ல் காரணமாக, தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்று மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்தன.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூர் பஞ்சாயத்து சார்பில் புதுசத்திரத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த கிராமத்தில் இன்று கிராம சபைக் கூட்டம் கூட்ட வேண்டும் என்று நாம் ஏற்கெனவே ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தோம். ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டம் நடத்துவது வழக்கம். அது தான் முறை. ஆகையினால், இந்த ஆண்டும் கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு அரசு எல்லா உத்தரவையும் போட்டுவிட்டது. பொதுவாக கிராம சபை கூட்டங்களில் அந்த கிராமத்தில் இருக்கக் கூடிய பிரச்னைகளை ஊராட்சி தலைவரிடத்தில், அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லக் கூடிய வகையில் கிராம சபை கூட்டம் நடைபெறும்.
விவசாயிகள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று சொல்வதைப் போல, கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு. நாம் எல்லாம் கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தான். நகரங்கள் எல்லாம் வளர்ச்சியடைந்தவை. இந்த கிராமங்கள் வளர்ச்சி பெற்றால்தான், இந்த நாடு செழிப்பாக இருக்க முடியும். அதனால்தான் காந்தியடிகள் கிராமங்களுக்கு முக்கியத்துவம் தந்தார்கள். கிராமத்தோடு மக்கள் வாழ வேண்டும். கிராமங்கள் செழிப்படைய வேண்டும். மக்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்பதில் காந்தியடிகள் குறிக்கோளுடன் இருந்து அதற்காக பாடுபட்டார்கள். அதனால்தான், காந்தி ஜெயந்தி அன்று இந்தியா முழுவதும் இருக்கிற மாநிலங்களில் கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் கூட்ட வேண்டும் என்று முடிவெடுத்து ஆண்டாண்டு காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், இன்றைக்கு இந்த கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது என்று இந்த ஆட்சி ரத்து செய்துவிட்டது.
அதனால்தான், கிராம சபைக்கூட்டம் என்ற பெயரில் இல்லாமல் மக்கள் சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இங்கே மக்கள் ஒரு உணர்வோடு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். அதனால், என்ன தடைபோட்டாலும் மக்கள் ஒன்று திரண்டு எங்கள் குறைகளைப் பேசுவோம் வந்திருக்கிறீகள் அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இது போன்ற உராட்சி சபைக் கூட்டம் என்பது மக்களுக்கு என்ன குறை என்பதைக் கேட்டு அறிந்து புரிந்து அதற்கு ஏற்ற வகையில் செய்ய வேண்டும். இந்த நாட்டினுடைய முதுகெலும்பு விவசாயிகள்தான். விவசாயிகள் இல்லையென்றால் நாம் எல்லாம் கிடையாது. விவசாயிகள் சேற்றிலே கைவைத்தால்தான் நாம் சோற்றிலே கைவைக்க முடியும். அந்த நிலையில் இருக்க கூடிய விவசாயிகள் இன்று என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று பாருங்கள்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, விவசாயிகளின் நன்மையைக் கருதி எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தார். அன்றைக்கு விவசாயிகள் மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராடினார்கள். துப்பாக்கிச்சூடு எல்லாம் நடந்தது. அன்றைக்கு முதல்வராக அதிமுக முதல்வர் எம்.ஜி.ஆர். மின்சாரக் கட்டணம் குறைக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். ஆனால், கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக வந்து, விவசாயிகள் போராடவில்லை, கோட்டைக்கு வந்து யாரும் மனு கொடுக்க வில்லை, ஆனால், சட்டமன்றத்தில் கருணாநிதி, நீங்கள் 1 பைசா மின்சாரக் கட்டணம் குறைக்க வேண்டும் என்று போராடினீர்கள். ஆனால், நீங்கள் 1 பைசா கூட கொடுக்க தேவையில்லை என்று இலவச மின்சாரம் அறிவித்தார். இது விவசாயிகளுடைய வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தியது.
அதற்கு அடுத்து, ஐந்தாவது முறையாக கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது, பல உறுதிமொழி கொடுத்தார். அதில் ஒன்று விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள கடனை முழுமையாக தள்ளுபடி செய்வேன் என்று ஒரு உறுதி மொழி கொடுத்தார். தேர்தலில் வெற்றி பெற்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட மேடையிலேயே விவசாயிகள் கடன் 7,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்கிறேன் என்று கையெழுத்து போட்டு அறிவித்தார்.
இப்படி விவசாயிகளுக்காக பல நல்ல காரியங்களை விளைபொருளை தானே விற்பனை செய்ய எல்லா ஊர்களிலும் உழவர் சந்தைகளை திறந்தார். ஆனால், இந்த ஆட்சியில் பல இடங்களில் சீரழிந்துகொண்டிருக்கிறது. இப்படி விவசாயிகளுக்காக பல நன்மைகளை செய்த ஆட்சி கலைஞர் தலைமையில் இருந்த திமுக ஆட்சி.
ஆனால், அந்த விவசாயிகளுக்கு என்ன கொடுமை நடக்கிறது. வேளாண்மைக்கு 3 புதிய சட்டத்தை மத்தியில் இருக்கக் கூடிய பாஜக ஆட்சி கொண்டுவந்திருக்கிறது. அதை ஏற்றுக்கொண்டு அதற்கு அடிபணிந்து இருக்கக் கூடிய ஒரு ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கக்கூடிய அதிமுக ஆட்சி. ஆகவே அதை எதிர்த்துதான் நாம் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
வேளாண்மைக்கு எதிராக இருக்கக் கூடிய அந்த சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். நீதிமன்றத்திற்கும் சென்றிருக்கிறோம். இதை விடுவது மாதிரி இல்லை. தொடர்ந்து, காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தப் போகிறோம். இதை நடத்தியே ஆக வேண்டும். ஊராட்சி சபை நடத்தும்போது அதில் வேளாண்மைக்கு எதிரான சட்டத்திற்கு எதிராக தீர்மானம் போட்டு அதை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நான் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தேன். அரசு கிராம சபை கூட்டம் நடத்துங்கள் என்று உத்தரவு போட்டுவிட்டது. நாம் இப்படி அறிவித்த உடன் 2 நாளைக்கு முன்பு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு என்ன உத்தரவு போட்டார்கள் என்றால், அரசியல் பேசக் கூடாது. அதில் அரசியல் இருக்க கூடாது. கண்டித்து தீர்மானம் போடக் கூடாது. கோரிக்கை வைத்து தீர்மானம் போடுங்கள். ஆனால், கண்டனம் தெரிவித்து தீர்மானம் போடக் கூடாது. அரசுக்கு எதிராக எந்த தீர்மானங்களும் இருக்கக் கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
நேற்று இரவு 10 மணிக்கு திடீரென ஒரு செய்தி வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய மொத்த ஊராட்சி சபை கூட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவிக்கிறார்கள். கிராம சபைக் கூட்டம் கிடையாது என்று துக்ளக் தர்பார் மாதிரி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு கொரோனா வைரஸ் என்று ஒரு காரணம் கூறுகிறார்கள். கொரோனாவுக்குப் பிறகு திமுகவைப் பார்த்தான் எடப்பாடி பயந்துகொண்டிருக்கிறார் இதுதான் உண்மை.
நாங்கள் மக்களுக்காக போராடுகிறோம். எங்கள் சொந்த பிரச்னைக்காக வந்து உட்காரவில்லை. மக்களுக்காக போராடுகிற திமுகவைப் பார்த்து அச்சப்பட வேண்டிய அவசியம் இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்களுக்கு வந்திருக்கிறது. இங்கே நான் எதுவும் அரசியல் பேசவில்லை. இது கிராம சபை கூட்டம் கிடையாது. மக்கள் சபை கூட்டம். கிராம சபைக் கூட்டமாக இருந்திருந்தால், இதைக்கூட நான் பேசியிருக்க மாட்டேன். தீமானத்தை மட்டும் போட்டு அனுப்பி வையுங்கள் என்று சொல்லியிருப்பேன். நமக்கு அரசியல் பேச வேண்டிய அவசியமே கிடையாது. அரசியல் பேசுவதற்கு என்று தனி மேடை இருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக்கொள்வோம் என்பது வேறு.
அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக அதுதான் எப்போதும் அதிகமாக வெற்றி பெறும். தேர்தல் நேரத்தில் எவ்வளவோ அக்கிரமங்கள் எல்லாம் நடந்தது. அநியாம் எல்லாம் செய்தார்கள் என்பது உங்களில் பல பேருக்கு தெரிந்திருக்கும். வெற்றி பெற்றவர்களை தோற்கடித்தார்கள் தோற்றவர்களை வெற்றி பெற வைத்தார்கள் இதெல்லாம் நடந்தது. அதையும் மீறி எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக ஆளும் கட்சி அதிமுகவைவிட அதிகமான இடங்களில் வெற்றி பெற்றோம் என்பது வரலாறு.” என்று கூறினார்.
இந்த நிலையில், தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூர் பஞ்சாயத்து சார்பில் தடையை மீற் கிராம சபை கூட்டம் நடத்தியதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, திமுகவைச் சேர்ந்த ஆவடி நாசர், பஞ்சாயத்து தலைவர் கந்தபாபு ஆகியோர் மீது 143, 188 உள்பட 3 பிரிவுகளின் கீழ் கீழ் வெள்ளவேடு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.