ஓபிஎஸ்-ஸுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்: ‘உங்கள் துறையில் உங்கள் மகன்கள் தொழில் செய்வதா?

ஓ.பன்னீர்செல்வம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் என்ற முறையில், இந்தப் பிரச்சினை குறித்துத் தமிழக மக்களுக்குத் தக்க விளக்கம் அளித்திடக் கடமைப் பட்டிருக்கிறார். இந்தக் கடமையிலிருந்து அவர் சப்தமில்லாமல் ஒதுங்கிக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன்

By: Updated: May 4, 2020, 02:17:40 PM

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில், அவரது இரண்டு மகன்களும் இயக்குநர்களாக இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் பிராஜக்ட் ஒன்றிற்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம், என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கொரோனா போர்வீரர்களுக்கு கப்பற்படை மரியாதை

இதுதொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்களான, அதிமுகவின் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஜெயபிரதீப் ஆகிய இருவரும் இயக்குநர்களாக இருக்கும் “விஜயந்த் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற நிறுவனம்.

திருப்பூரில் செய்யவிருக்கும் தங்களது “ரியல் எஸ்டேட் பிராஜெக்ட்டு”களைப் பதிவு செய்து கொள்ள, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் கீழ் உள்ள தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்திடம் கடந்த கடந்த ஜனவரி 20 அன்று விண்ணப்பித்திருப்பது, அதிலும் தமது முகவரியாக அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முகவரியை குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதிமுக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட “தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்” (TNRERA) என்னும் அமைப்பு, ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு வகிக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கி வருகிறது. அதற்குரிய தலைவரைத் தேர்வுசெய்யும் “தேர்வுக்குழுவில்” வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் ஒரு உறுப்பினராக இருக்கிறார்.

இதுதவிர, அந்தக் குழுமத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது புகார் வந்தால் – அதன்மீது முதற்கட்ட விசாரணை நடத்தும் அதிகாரம் ஓ.பன்னீர்செல்வத்தின் துறைக்குத்தான் இருக்கிறது. ஏன், “தாமாகவே முன்வந்து” விசாரிக்கும் அதிகாரம்கூட இத்துறைக்கு இருக்கிறது.
இப்படியொரு அதிகாரம் உள்ள நிலையில் தமது தந்தை அமைச்சராக இருக்கும் துறையின் கீழ் வரும் குழுமத்திடம், மகன்கள் இருவரும் தாங்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனத்தின் கட்டுமானத் தொழிலைப் பதிவு செய்து கொள்ள விண்ணப்பித்துள்ளது, ஆட்சியையும், அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்யும் அப்பட்டமான முயற்சியாகும்.

ஆதாய முரணாகும் (Conflict of Interest). தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதையும் மறந்து விட்டு, தமது சகோதரரை இணைத்துக் கொண்டு, இன்னும் ரியல் எஸ்டேட் கம்பெனியில் இயக்குநராகத் தொடரும் ரவீந்திரநாத் குமார் தங்களது தந்தையின் துறையிலேயே, தமக்கு சாதகமான உத்தரவு பெற முயற்சிப்பதும், அதற்கு தந்தையின் துறை அனுமதி கொடுப்பதும், இன்னொரு லஞ்ச ஊழல் வழக்கிற்கான அடிப்படை ஆதாரம் என்பதில் சந்தேகமில்லை.

ஓ.பன்னீர்செல்வம் தமக்குப் பிடித்த “அம்மா” சமாதி முன்பு அமர்ந்து நடத்திய “தர்மயுத்தத்தை” துறந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த பழைய அத்தியாயத்தையும் மறந்து,- துணை முதலமைச்சர் பதவியையும் – வீட்டுவசதித்துறை அமைச்சர் பதவியையும், முகத்தில் “புன்னகை” மின்ன ஏற்றுக் கொண்டதன் ரகசியப் பின்னணி, ஒவ்வொன்றாகப் புரிய வருகிறது!

“என் உறவினர்கள் டெண்டர் எடுப்பதை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்” என்று ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டதைப் பின்பற்றி, “என் மகன்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்” என ஓ. பன்னீர்செல்வம் எதிர்க் கேள்வி கேட்டாலும் கேட்கலாம்.

ஆனால், “தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்”, ஓ. பன்னீர்செல்வத்தின் பொறுப்பில் உள்ள வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் இயங்குகிறது; ரவீந்திரநாத் குமார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், என்ற உண்மைகளை எப்படி ஒதுக்கிவிட முடியும்?
ஆகவே, ஓ.பன்னீர்செல்வம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் என்ற முறையில், இந்தப் பிரச்சினை குறித்துத் தமிழக மக்களுக்குத் தக்க விளக்கம் அளித்திடக் கடமைப் பட்டிருக்கிறார். இந்தக் கடமையிலிருந்து அவர் சப்தமில்லாமல் ஒதுங்கிக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன்”.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Dmk mk stalin ops o panneerselvamreal estate project mp ravindrananth

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X