திமுக எம்.எல்.ஏ.வை ஜெயிலில் வைப்பேன் என வீடியோவில் மிரட்டிய இளைஞர்!

திருச்செந்தூர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சித்து அவரது அனைத்து தவறுகளையும் வெளியிடுவேன் என்றும் அவரை சிறையில் வைப்பேன் என்றும் இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

By: January 30, 2020, 8:22:31 PM

திருச்செந்தூர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சித்து அவரது அனைத்து தவறுகளையும் வெளியிடுவேன் என்றும் அவரை சிறையில் வைப்பேன் என்றும் இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

திமுகவைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் 2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4வது முறையாக திருச்செந்தூர் எம்.எல்.ஏ-வாக இருந்துவருகிறார்.

அனிதா ராதாகிருஷ்ணன், திமுகவில் இணைவதற்கு முன்பு அதிமுகவில் அமைச்சராக இருந்தார். அதன்பிறகு, அதிமுகவில் இருந்து திமுகவில் சேர்ந்து திருச்செந்தூர் எம்.எல்.ஏ. ஆனார். தற்போது, திமுகவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். அவர் அதிமுக, திமுக என எந்தக் கட்சியில் இருந்தாலும் திருச்செந்தூரிலும் தூத்துக்குடியிலும் அவருக்கென்று பெரிய செல்வாக்கு உள்ளது.

இந்த நிலையில்தான், இளைஞர் ஒருவர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனைப் பற்றி ஒரு மீம் வெளியிட்டதாகவும் அதற்கு அவர் அந்த இளைஞரின் குடும்பத்தினரை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 18 ஆண்டுகளாக செய்த தவறுகள் தனக்கு தெரியும் என்றும் அதனை வெளியிட்டு அவரை ஜெயிலில் வைப்பது உறுதி என்றும் கடுமையாக விமர்சித்து ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த இளைஞரின் பெயர் மணிகண்டன் என்றும் திருச்செந்தூர் கோட்டைத் தெருவைச் சேர்ந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தீபிகா மணிகண்டன் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனை கடுமையாக விமர்சித்து பதிவிடப்பட்ட அந்த வீடியோவில், மணிகண்டன் என்பவர், “நண்பர்கள் எல்லாருக்கும் என் வணக்கம்.. இது எனக்கும் திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் நடக்கிற விஷயம்.. அனிதா ராதாகிருஷ்ணா.. நீ யார் பேர்ல இல்லீகலா சொத்து சேர்த்திருக்கிறேன்னு ஒரே ஒரு மீம் போட்டேன்.. ராத்திரி 1 மணிக்கு ஒரு மீம் போட்டேன்.. ஆனால் பதறியடிச்சிட்டு என் வீட்டுக்கு காலைல 5 மணிக்கு ஆள் அனுப்பி மிரட்டியிருக்கே.. நீ ஒரு தப்பு பண்ணிட்டே அனிதா ராதாகிருஷ்ணன்.. நீ என்னை தனியா கூப்பிட்டு பேசியிருக்கணும்.

ஆனால், என் அம்மா, அப்பா, என் தம்பி, தம்பி பொண்டாட்டி எல்லாரும் இருக்கிற இடத்துல ஆள் அனுப்பி.. என் வீட்டுல வந்து வெச்சு.. அவங்களை பயம் காட்டியிருக்கே.. சத்தியமா சொல்றேன்.. இந்த 18 வருஷத்துல நீ செய்த அயோக்கியத்தனம் எல்லாத்துக்கும் நான் ஆதாரம் வெச்சிருக்கேன்.. ஜூலை 31, 2018-ல் என்னை மிரட்டும்போதே, உன் சம்பந்தப்பட்ட எல்லா அயோக்கியத்தனத்தையும் வெளியே கொண்டு வரணும்னு முடிவு பண்ணிட்டேன். அனிதா ராதாகிருஷ்ணன் நீ திருச்செந்தூரில் யார் யார் பேரில் பினாமி சொத்து சேர்த்திருக்கே, என்னென்ன அயோக்கியத்தனம் நடந்தது, எந்தெந்த ஆர்டிஓ-வை கரெக்ட் பண்ணி தப்பை மறைச்சிருக்கே, ஆழ்வார் திருநகரில் நடந்த கொலையை மறைச்சிருக்கே, வேலை வாங்கி தர்றேன்னு சொல்லிட்டு எத்தனை பேர் கிட்ட காசு புடுங்கியிருக்கே, சாதி பேரை சொல்லி எத்தனை பேரை நாறடிச்சிருக்கே, உன்னை எதிர்த்து பேசின ஒருத்தனை கொலை பண்ணியிருக்கே, அந்த சாட்சி வரைக்கும் என்கிட்ட இருக்கு. நீ எப்போ ஆளுங்களை விட்டு என் வீட்டுக்கு வந்து மிரட்டினியோ, அன்னைக்கே நான் முடிவு பண்ணிட்டேன், நீ பண்ண எல்லா அயோக்கியத்தனத்தையும் இந்த உலகுக்கு காமிக்கணும்னு!

2011-ல் ஜெயலலிதா உன்னை எப்படி திருச்சி ஜெயில்ல வெச்சாங்களோ, அதே மாதிரி உன்னை நான் தூத்துக்குடி ஜெயிலில் வெப்பேன்.. மெட்ராஸ்-ல பினாமி வெச்சு தொழில் பண்ணினா, திருச்செந்தூரில் தெரியாதா? எல்லாத்தையும் காட்டறேன்.. அப்புறம் திருச்செந்தூரில் ஸ்டேஷனில் இருக்கிற போலீசுக்கு எல்லாம் நான் ஒரு சின்ன வார்னிங் தர்றேன். காக்கி சட்டை போட்டுட்டு பப்ளிக் சர்வீஸ் பண்றீங்களா? எம்எல்ஏ சர்வீஸ் பண்றீங்களா? பிரச்சனை என்னன்னு கேட்டு விசாரிக்கணும். எல்லாரையும் கதற விடுவேன்” என்று எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சவால் விடுத்துள்ளார். மேலும், இந்த நபர் வீடியோவில், எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

உண்மையில் இந்த இளைஞர் பெயர் என்ன? யார் இவர் என்ற விவரம் தெரியவில்லை. திருச்செந்தூர் தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ.வாக உள்ள ஒரு மூத்த அரசியல்வாதி மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் மிரட்டி விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுதியுள்ளது. இந்த வீடியோ குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dmk mla anitha radhakrishnan youth criticize him and video released

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X