பழனியில் திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு, பழனி நகர உதயநிதி ஸ்டாலின் தலைமை நற்பணி மன்றம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் கலந்துகொண்டார்.
அவர், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், பழனி அரசு மருத்துவமனைக்கு மின்விசிறி, கட்டில், மெத்தை போன்ற உபகரணங்களும், நடக்கமுடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களும், ஆயிரம் பயனாளிகளுக்குத் தையல் மெஷின், சலவைப் பெட்டி உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கினார்.
தொடர்ந்து, ஐ .பி. செந்தில்குமார் மற்றும் நற்பணி மன்ற மாநில செயலாளர் பாபு ஆகியோர் பழநி மலையில் தங்கத் தேர் இழுத்து முருகப் பெருமானை வழிபட்டனர்.
அப்போது பேசிய ஐ.பி. செந்தில்குமார், " உதயநிதி ஸ்டாலின் மிகவும் ராசியானவர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற அடித்தளம் அமைத்தார்.
அதே போல சட்டமன்ற தேர்தலின் போதும் தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர வைப்பதற்கு உதயநிதி ஸ்டாலினின் சூறாவளி பிரச்சாரம் காரணமாக அமைந்தது. உதயநிதி ஸ்டாலின் கையிலெடுத்த முதல் எய்ம்ஸ் செங்கல் திமுக ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்தது என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil