J.Anbazhagan Funeral: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று காலை தனியார் மருத்துவமனையில் தனது 62வது பிறந்தநாளில் காலமானார். திமுகவில் சென்னையின் துணிச்சலான கம்பீரமான ஆளுமையாக வலம் வந்த ஜெ.அன்பழகனின் இறுதிப் பயணத்தின் புகைப்படத் தொகுப்பு இங்கே அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் திமுக முகங்களில் ஒருவரான சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். திமுகவினர் அன்பழகன் உருவப் படத்துக்கு ஆங்காங்கே மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஜெ.அன்பழகன் உடலை சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி, மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உடல் அடக்கம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். இதையடுத்து அவரது உடல், மருத்துவமனையில் இருந்து தியாகராய நகர் அருகே உள்ள கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
ஜெ.அன்பழகனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் தியாகராயநகர் வழியாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழி நெடுக நின்றிருந்த மக்கள் அவரது உடல் கொண்டு செல்லப்படுவதைப் பார்த்து கதறி அழுதனர்.
கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் ஜெ.அன்பகனின் தந்தை பழக்கடை ஜெயராமன் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு அருகேயே ஜெ.அன்பழகன் உடல் 15 அடி ஆழம் குழி தோன்டப்பட்டு உடல் நல் அடக்கம் செய்யப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"