திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் கே.பி.சங்கர். இவர், திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சிப் பொறியாளரை தனது ஆதரவாளருடன்சேர்ந்து சில நாள்களுக்கு முன்பு தாக்கியுள்ளார்.
சாலை பணிகளை அமைக்க வந்த 13 லாரிகளில் வந்த தார்-ஜல்லிக் கலவையையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுத்திட கோரிக்கை வலுத்தது.
இப்பிரச்சினை விஷ்வரூபம் எடுத்திட,திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி வருவதால் திருவொற்றியூர் திமுக மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், பதவியை தவறாக பயன்படுத்திய திமுக எம்எல்ஏ சங்கரை கைது செய்ய வேண்டும் என ட்விட்டர் பக்கத்தில் இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். Arrest_MLASankar என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
இணையவாசி ஒருவர், திமுக எம்எல்ஏ சங்கர், 5 சதவீதம் கமிஷன் தொகை கேட்டதாரவும், ஆனால் சம்மந்தப்பட்ட கான்ட்ரக்டர் 1 சதவீதத்துக்கு மேல் தர முடியாது என கூறியதாக பதிவிட்டுள்ளார்.
மற்றொரு இணையவாசி ஒருவர், கட்சி பொறுப்பை விட்டு நீக்கியது திமுக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை சரி! ஆனால் திமுக ஆட்சியின் நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil