/tamil-ie/media/media_files/uploads/2020/11/sekar-babu-1.jpg)
பாஜகவின் வேல் யாத்திரைக்கு போட்டியாக, திமுக சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான சேகர் பாபு தனது தொகுதியில் விளக்கு பூஜைகளை நடத்தி வருகிற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
தமிழத்தில் அடுத்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே கிட்டத்தட்ட கூட்டணியை உறுதி செய்துவிட்ட நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் பாஜக தனது பலத்தைக் காட்டும் வகையில், திரைத்துறையினர், மற்ற கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை பாஜகவில் இணைத்து வருகிறது. இந்த சூழலில்தான் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவித்தார். இந்த வேல் யாத்திரை நவம்பர் 6ம் தேதி திருத்தணியில் தொடங்கி டிசம்பர் 6ம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் விதத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாக எல்.முருகன் அறிவித்தார். இந்த வேல் யாத்திரை தமிழகத்தின் வடக்கே தொடங்கி ஆறுபடை வீடுகளை தொட்டு தெற்கே திருச்செந்தூரில் முடிவடைய உள்ளது.
பாஜகவின் இந்த வேல் யாத்திரைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட இயக்கங்கள் அனுமதி அளிக்க கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர்.
பாஜக வேல் யாத்திரை மூலம் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட திட்டமிட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், பாஜகவின் வேல் யாத்திரையின்போது கலவரத்தை தூண்ட பாஜக எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக எல்.முருகன் குற்றம்சாட்டினார்.
திமுக எம்.பி கனிமொழி, “தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த நிலையில், பாஜகவின் வேல் யாத்திரைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக மாவட்ட செயலாளர் சேகர் பாபு விளக்கு பூஜை நடத்துவதாக புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சேகர் பாபு தற்போது சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராகவும் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த சேகர் பாபு, அதிமுகவில் இருந்தபோது இருந்த அதே தெய்வ பக்தியுடன்தான் இப்போதும் இருக்கிறார். அவ்வப்போது, கருப்பு வேட்டிகளை கட்டிக்கொண்டு வலம் வருவார். ஆனாலும், கட்சிப் பணிகளில் எப்போதும் சுறுப்பாக செயல்படுபவர். இவருடைய செயல்பாடுகளை வைத்துதான் திமுகவில் மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டது.
சேகர் பாபு, அடுத்த ஆண்டு வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக இப்போதே தனது துறைமுகம் தொகுதியில் பணிகளை தொடங்கிவிட்டார். துறைமுகம் தொகுதியில் இந்துக்கள், முஸ்லிம்கள், மீனவர்கள் எல்லா சமூக மக்களும் கலவையாக உள்ளனர். எல்லோரையும் ஈர்க்கும் வகையில், துறைமுகம் தொகுதி திமுக எம்.எல்.ஏ தனது பணிகளை செய்து வருகிறார்.
பாஜக தலைவர் எல்.முருகன் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று குற்றம் சாட்டிவருகிறார். அதே நேரத்தில், வேல் யாத்திரையையும் அறிவித்துள்ளது.
இந்த சூழலில்தான் திமுக எம்.எல்.ஏ சேகர் பாபு தனது துறைமுகம் தொகுதியில் உள்ள கோயில்களில் விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சில இடங்களில் சேகர் பாபுவே விளக்கு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறுகின்றனர்.
சேகர் பாபு விளக்கு பூஜையில் பங்கேற்கு புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், திமுகவின் சென்னை மாவட்ட செயலாளர் சேகர் பாபு, பாஜகவின் வேல் யாத்திரைக்கு போட்டியாக விளக்கு பூஜையைத் தொடங்கியிருக்கிறாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாஜகவின் வேல் யாத்திரைக்கு போட்டியாகவோ அல்லது இயல்பாகவோ சேகர் பாபு அதிரடியாக முன்னெடுக்கும் இந்த விளக்கு பூஜை கவனத்தைப் பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.