Annamalai and Udayanidhi Stalin both of them met and talked directly is a hot topic in political circles : அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் தி.மு.க பா.ஜ.க இடையே அவ்வப்போது காரசாமான விவாதம் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. இதனிடையே தி.மு.க ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து அக்கட்சியின் மீது பா.ஜ.க ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகிறது. இதில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவ்வப்போது திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் தமிழகத்தில் இருக்கும் திமுகவை சேர்த்த அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது விமானம் ஏறத்தெரியாது என்று விமர்சித்ததும் அதற்கு திமுக தரப்பில் அனைத்து அமைச்சர்களும் ஆங்கிலத்தில் பேசி பதில் அளித்தும் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வாறு பாஜகவும் திமுகவும் எலியும் பூனையுமாக இருக்கும் நிலையில், அண்ணாமலை உதயநிதி சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஐசரி கனேசனின் தயார் புஷ்பா நேற்று மரணமடைந்தார். அவரது உடல் சென்னை ஈச்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கனேசன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், நேற்று மாலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார்.
அவரைத்தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தார். இருவரும் அஞ்சலி செலுத்திவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அண்ணாமலை முதல்வர் ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து நலம் விசாரித்துள்ளார்.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் துக்க நிகழ்வில் கலந்துகொண்ட போது இருவரும் நலம் விசாரித்துக்கொண்டது ஆரோக்கியமாக அரசயலாக பார்க்கப்பட்டாலும், இவர்களின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“