Advertisment

இரவல் தயவில் பிரமராகிறார் மோடி - தி.மு.க விமர்சனம்

“இந்திய மக்கள் மோடியை ஆட்சி செய்ய வாக்களிக்கவில்லை. இரவல் தயவில் மோடி பிரதமராகும் சூழல் அனுமதித்துள்ளது” என்று தி.மு.க-வின் நாளேடான 'முரசொலி' தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Congresss total seats in last 3 Lok Sabha polls less than what we won in 2024 Modi at NDA parliamentary meet

லோக்சபா தேர்தல் முடிவுகள், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பிரதமர் மோடி, திமுக கூட்டணி கட்சிகள் மேலும், லோக்சபா தேர்தலுக்கு முன், 370 இடங்களில், தன் கட்சி தனித்து வெற்றி பெறும் என, மோடி கூறியிருந்தாலும், அது நடக்கவில்லை என்றும், பா.ஜ.க. 240 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. (PTI Photo)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரதமர் மோடி இரவல் தயவில் பிரதமராக உள்ளார், இந்திய மக்கள் மோடி ஆட்சி செய்வதற்கு வாக்களிக்கவில்லை என்று தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது.

Advertisment

இது குறித்து முரசொலில் நாளிதழ் தலையங்கத்தில் எழுதியிருப்பதாவது: “கடவுளைச் சொல்லி வாக்குக் கேட்டார் மோடி. அது செல்லுபடி ஆகவில்லை என்றதும் தன்னைத் தானே கடவுள் என்று சொல்லிக் கொண்டார். இன்றைய நிலையில் அவரே சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் தயவில்தான் பிரதமர் ஆக முடிந்திருக்கிறது.

400 இடங்களைக் கைப்பற்றுவோம் என்று நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சொன்னார் பிரதமர் மோடி. பா.ஜ.க.வினர் கைதட்டினார்கள். 370 இடங்களை பா.ஜ.க. மட்டும் தனித்து கைப்பற்றும் என்றும் சொன்னார் பிரதமர் மோடி. மேஜையைத் தட்டினார்கள் பா.ஜ.க.வினர். ஆனால் என்ன நடந்திருக்கிறது?

பா.ஜ.க. 370 இடங்களைப் பெறவில்லை. 240 இடங்களைத் தான் பெற்றுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 272 இடங்கள் இருக்க வேண்டும். அதற்கே 32 இடங்கள் தேவை. பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 272 ஐ விட 100 இடங்கள் அதிகமாகப் பெறுவோம் என்று சொல்லிக் கொண்டார். ஆனால் அதலபாதாளத்துக்கு பா.ஜ.க. இறங்கிவிட்டதைக் கண்ணால் பார்க்கிறோம்.

பா.ஜ.க. கூட்டணியானது 400 இடங்களைப் பிடிக்கும் என்று சொன்னார் மோடி. இன்று பா.ஜ.க. கூட்டணியானது 292 இடங்களைத் தான் பிடிக்க முடிந்துள்ளது. 300 ஐ கூடத் தொட முடியவில்லை. கூட்டணியாகவும் அவர் சொன்னது பணால் ஆகிவிட்டது.

இத்தகைய சரிவுக்கும் தோல்விக்கும் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் அவர் இந்தத் தேர்தல் வெற்றியை ‘தனிப்பட்ட தன்னுடைய வெற்றியாகவே’ காட்ட நினைத்தார். அது தோற்றுப் போன நிலையில், இந்தத் தோல்விகள் அனைத்தும் தனிப்பட்ட அவரின் தோல்விகள் தானே!

அவருக்காகவே தேர்தலானது ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்துத் தொகுதிக்கும் தானே சென்று –- தானே பேசி -– தானே மக்களைக் கவர்ந்து – ‘என்னை நானே 400’ ஆக்கிக் கொள்ளப் போகிறேன் –- என்று புறப்பட்டவர் அவர். அதனால் இந்தத் தோல்விகள் அனைத்தும் அவருக்கே போய்ச் சேர வேண்டியவை ஆகும்.

பத்தாண்டு காலம் பிரதமராக இருக்கும் வாய்ப்பு அவருக்குத் தரப்பட்டது. ஒன்றல்ல, இரண்டு முறை பிரதமராக இருந்தார். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவும் இல்லை. புதிதாக எதையும் செய்து தரவுமில்லை. அவருடைய சிந்தனையில் ‘நாடு’ அகற்றப்பட்டு, சில மனிதர்கள் மட்டும் உட்கார்ந்து கொண்டார்கள். ‘இந்தியா’வுக்காக ஆட்சி நடத்தவில்லை. விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில இந்தியர்களுக்காக ஆட்சியை நடத்தினார். இறுதியாக தேர்தல் நேரத்தில் வெறுப்பை விதைத்தார். வெறுப்பை மட்டுமே விதைத்தார். ‘தினை விதைத்தால் தினை அறுக்கலாம். வினை விதைத்தால் வினைதான் அறுக்க முடியும்’ என்பதற்கு ஏற்ப அவர் விதைத்த வெறுப்பு, அவர் மீதான வெறுப்பாக ஆனது.

முதல் கட்ட தேர்தல் பரப்புரையின் போது மட்டும் அடக்கி வாசித்த பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தனது பழைய பாணியைக் கையில் எடுத்தார்.‘உங்கள் சொத்தை எடுத்து இசுலாமியருக்கு கொடுத்து விடுவார்கள்’, ‘இசுலாமியர் வெளிநாட்டவர்’, ‘அதிக பிள்ளைகள் பெற்றுக் கொள்பவர்கள்’, ‘உங்கள் நகையை எடுத்து அவர்களுக்கு கொடுத்து விடுவார்கள்’, ‘உங்கள் தாலியை எடுத்துக் கொடுத்து விடுவார்கள்’, ‘உங்களிடம் இரண்டு எருமை மாடுகள் இருந்தால் அதில் ஒன்றைப் பறித்து விடுவார்கள்’, ‘பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டை இசுலாமியருக்கு கொடுத்து விடுவார்கள்’, ‘காங்கிரஸ் வென்றால் பாகிஸ்தான் மகிழ்ச்சி அடையும்’,என்பது போன்ற பீதியையும் பூச்சாண்டி வாக்குமூலங்களையும் தினந்தோறும் உதிர்த்தார் மோடி.

‘இராமர் கோவிலையே இடித்துவிடுவார்கள்’ என்று சொன்னதை விட மிகமிகமிக மோசமான சிந்தனை இதுவரை யாருக்கும் இருந்தது இல்லை. ஆபாசமான ஒரு ரெக்கார்ட் டான்ஸை உதாரணம் காட்டி அவர் பேசியதைப் போன்ற அருவெறுப்பான பேச்சை இந்திய அரசியல் ஆளுமைகளில் எவரும் பேசியது இல்லை. இப்படி நாளுக்கு நாள் வெறுப்பையும் அருவெறுப்பையும் கொடூரத்தையும் தனது உரைகளில் மோடி வெளிப்படுத்தக் காரணம், அவரது பரப்புரைக்கு எந்தவிதமான ஆதரவும் பொதுமக்கள் மத்தியில் கிடைக்கவில்லை என்ற கோபமும் ஆத்திரமும் தான் இப்படி வார்த்தைகளாக வெடித்தது.

தேர்தல் பத்திரங்கள் மூலமாகத் திரட்டிய பல்லாயிரம் கோடி பணத்தை வைத்து –- எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித் துறை மூலமாக ரெய்டுகளை நடத்தி - மிகப்பெரிய ஊடகங்கள் அனைத்தையும் கைக்குள் போட்டுக் கொண்டு –- முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கி – சில பல கட்சிகளை உடைத்து -– இரண்டு மாநில முதலமைச்சர்களைக் கைது செய்து –- அனைத்து பரப்புரை வசதிகளையும் தனக்கு மட்டுமே வைத்துக் கொண்டு –- அதன்பிறகும் திக்கித் திணறி 240 இடங்களை மோடி பிடித்துள்ளார்.

அவர் மூன்றாவது முறை ஆள்வதற்கு மக்கள் விரும்பி இருந்தால் –- 300 இடங்களை பா.ஜ.க.வுக்கு கொடுத்திருக்க வேண்டும். மோடி மீண்டும் வரக் கூடாது, ஆளக் கூடாது என்றே மக்கள் வாக்களித்தார்கள். அதனால்தான் பெரும்பான்மை இடங்களைக் கூட பா.ஜ.க. பெற முடியவில்லை.

ஒரிசா– - ஆந்திரா ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தலோடு சேர்த்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாமல் இருந்திருந்தால் அங்கும் நிலைமைகள் மாறி இருக்கும். மாநில ஆட்சியை மாற்ற நினைத்தவர் கோபம், நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலித்து விட்டது.பீகார் -– கர்நாடகாவில் பத்து இடங்கள் குறைந்திருந்தால் நிலைமை மாறி இருக்கும். 210க்கு பா.ஜ.க. இறங்கி இருக்கும். எனவே, இது ‘சூழ்நிலையால்’ கிடைத்த இடங்களே தவிர, ‘தகுதியால்’ பெற்ற இடங்களும் அல்ல.

மோடி ஆள்வதற்கு இந்திய நாட்டு மக்கள் வாக்களிக்கவில்லை. இரவல் தயவில் பிரதமராக இருப்பதற்கு மட்டுமே இப்போதும் சூழ்நிலை இடம் கொடுத்துள்ளது. இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்கட்டும். இனிமேலாவது ‘இந்தியா’வுக்காக ஆளுங்கள் என்பதுதான் நம்முடைய வேண்டுகோள்.

‘400 கொடுத்தால் அதைச் செய்வேன்’, ‘370 கொடுத்தால் அதைச் செய்வேன்’ என்று உருட்டியது போதும். ‘இந்திய மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள். கண்ணீரும் கவலைகளும் இல்லாத இந்தியாவை உருவாக்குங்கள். அது போதும்!” என்று முரசொலி நாளிதழ் எழுதியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment