’கேப்டன் பெயரைக் காப்பாறுங்கள்’ என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு அறிவுரை கூறி திமுகவின் முரசொலி நாளேடு திங்கள்கிழமை கட்டுரை வெளியிட்டுள்ளதால் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்தின் தேமுதிக 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது. அதற்கு முன்னதாக 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தோல்வியை சந்தித்தது. 2011ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தது.
சமீபத்தில் நடத்த தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற் சட்டமன்றத் தேர்தலில், தேமுதிகவுக அதிக எண்ணிக்கையில் சீட் கொடுக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும் என்று தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா பேசினார்.
இந்த நிலையில், திமுகவின் முரசொலி நாளேடு இன்று ‘கேப்டன் பெயரைக் காப்பாறுங்கள்’ என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு திடீரென அறிவுரை கூறி கட்டுரை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 1ம் தேதி முரசொலியில் 10வது பக்கத்தில் கேப்டன் பெயரைக் காப்பாற்றுங்கள் என்று தலைப்பிட்டு, கேப்டனின் அபிமானி என்று சிலந்தி என்ற பெயரில் கட்டுரை வெளியாகி உள்ளது. அந்த கட்டுரையில், “அண்ணியார் பிரேமலதா அவர்கட்கு,
சினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் தலைதாழாதவர், நமது புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். அவரது ரசிகர்களாகஇருந்து தொண்டர்களாக ஆன என்னைப் போன்றவர்கள்,அவரிடம் உயர்ந்தோங்கி இருந்த சுயமரியாதை உணர்வுகண்டு சிலிர்த்துப்போய், அவர் துவங்கிய கட்சியில் எங்களைஇணைத்துப் பணியாற்ற வந்தோம்! புரட்சிக் கலைஞருக்குஉடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு, முன்புபோல அவரால் செயல்படமுடியாத நிலை உருவானபோது, இந்தக் கட்சி தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கத் துவங்கியது! புரட்சிக் கலைஞரின்வாழ்க்கைத் துணையாக மட்டுமின்றி, அவரது அரசியல்பயணத்தில் அவருக்கு உற்ற துணையாக நீங்கள் இருந்தீர்கள்.
விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசமே உங்களது உந்துதலால் உருவானது என்றுகூட அப்போது கூறப்பட்டது! எது எப்படியோ? புரட்சிக் கலைஞரை நம்பி அவரது இயக்கத்தில் இணைந்தோம்! உடனடியாகஇல்லாவிடிலும், ஒருகாலத்தில் இந்தக் கட்சியில் உன்னதஇடம் பெறுவோம் என எண்ணினோம்! ஆனால் இன்றோ, இந்தக் கட்சியை எல்லோரும் ஏளனமாகப் பார்க்கும்நிலை உருவாகி விட்டது!
‘அற்பத் தொகைக்காக அரிய பொருளை அடகு வைப்பது’ போல, நீங்கள் இந்தக் கட்சியை அடகுப்பொருளாக்கி விட்டீர்கள்!
“எங்களை எப்போது அழைக்கப் போகிறீர்கள்? உடனடியாக அழையுங்கள் -காலதாமதம் செய்யாதீர்கள்” – என, நித்தம்நித்தம் நீங்கள் அ.தி.மு.க.வை வேண்டுவதுகண்டு, நாங்களெல்லாம் புழுங்கிச்சாகிறோம். கேப்டன் விஜயகாந்த் ஆரம்பித்த கட்சிக்கு இந்த அவல நிலையா? -என வாய்விட்டு அழமுடியாத நிலையில்உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறோம்!
2011 தேர்தலின் போது தொகுதி உடன்பாட்டை முடிவு செய்ய, ‘கேப்டன் எப்போதுவருவார்?’ என எதிர்பார்த்து, நாள் முழுவதும் ஜெயலலிதா, தனது போயஸ் தோட்டவீட்டிலே காத்திருந்தார்.
நிருபர்களெல்லாம் தே.மு.தி.க. அலுவலகத்திலும், போயஸ் கார்டனிலும், ‘எப்போது சந்திப்பு நடக்கும்’ எனக் காத்திருந்தனர். பகல்1 மணியளவில் கேப்டன் போயஸ் தோட்டத்துக்குச் செல்லக்கூடும் என அவரை வரவேற்க ஜெயலலிதா கட்சித் தொண்டர்களும், தலைவர்களும் காத்திருந்தனர். ஆனால் 1 மணிக்கும்கேப்டன் செல்லவில்லை. மாலை 4 மணி, இரவு 7.30 மணிஎனக் கடந்தும் விஜயகாந்த் புறப்படவில்லை. 8 மணியளவில்கட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டார். செய்தியாளர்கள்எல்லாம் சுறுசுறுப்பானார்கள்.
கேப்டன், போயஸ் கார்டன் செல்லவில்லை. மாறாக,அவரது வீட்டிற்குச் சென்றார்.அதன்பின்னர். சுதீசுடன்போயஸ் தோட்டம் சென்றார். அவருக்காக ஜெயலலிதாவும்,அவரது கட்சித் தலைவர்களும் நாள் முழுதும் காத்துக்கிடந்தனர்! பின்னர் கேப்டன் அங்கு சென்றதும், வாசலிலேயே அ.தி.மு.க. கட்சித் தலைவர்கள் அவரைவரவேற்று, அவருக்காகக் காத்திருந்த ஜெயலலிதா முன்அழைத்துச் சென்றனர். இதை எல்லாம் நெஞ்சுயர்த்திநாங்கள் பார்த்தோம்! இப்போது அந்த கேப்டன் கட்சியை,எச்சில் இலை எப்போது வெளியே வந்து விழும் எனநாக்கைத் தொங்கப் போட்டுக் காத்துக் கொண்டிருக்கும்பிராணி நிலைக்கு கீழே தள்ளி விட்டு விட்டீர்களே!
பா.ம.க. தலைவரை அமைச்சர்கள் இதுவரை ஓடிஓடிபலமுறை சந்தித்துள்ளனர். நோட்டா அளவுகூட, தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க முடியாத பா.ஜ.க. தலைவரைமதுரைக்குத் தேடிச் சென்று, அவரது பாதாரவிந்தங்களைக்கழுவிட அ.தி.மு.க. அமைச்சர்கள் ஓடுகின்றனர்!‘பாமகவுக்கு ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும்தான் வாக்குவங்கி இருக்கிறது.நமக்கோ தமிழகமெங்கும் இருக்கிறது’ எனக்கூறிக் கொண்டிருக்கும்நம்மை, யாரும் சீண்டக்கூட இல்லை! இந்த நிலையில் நீங்கள் ஒவ்வொருநாளும் “எப்போது வரப்போகிறீர்கள்… ஏன்இன்னும் வரவில்லை” -என வீட்டு வாசலிலேயே பாக்கு வெற்றிலைவைத்துக் கொண்டு அலைவது கேவலமாகத்தோன்றவில்லையா?
செய்தியாளர்கள், “பாமகவிடம் ஓடிஓடிஅமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.உங்களிடம் ஏன் வரவில்லை?” என்று கேட்டபோது, பாமக தலைவரிடம், அவர் வைத்த 20 சதவிகித இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாகப் பேசச்சென்றிருக்கலாம் என்று பதிலளிக்கிறீர்கள்.
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு என்பது, ஓரிருஅமைச்சர்கள் பேசி முடிவெடுக்கக் கூடியதா? வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சம்பந்தமாக அன்புமணியையும்,மற்றைய பா.ம.க. தலைவர்களையும் கோட்டைக்கு அழைத்தேமுதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பேசி, அதுகுறித்துஅன்புமணி, பேச்சுவார்த்தைக்குப் பின் வெளியே வந்து பேட்டிதந்துவிட்டாரே! நமக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை, அசிங்கத்தை இப்படி எல்லாம் பூசி மொழுகத் தலைப்படாதீர்கள்!
“இன்னும் பாராமுகம் ஏனய்யா…. இந்த ஏழையின் குரல்உன்செவி ஏறவில்லையா….. அருள்புரிய இன்னும்பாராமுகம் ஏனய்யா” – எனப் பாடுவதைப்போல, நித்தம் நித்தம் அவர்களைப் பார்த்துக் கெஞ்சுவது, எதனை எதிர்நோக்கி என்பது விளங்கவில்லை!.
ஒரு பக்கம் மொத்தத் தொகுதியிலும் போட்டியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பூத் கமிட்டிகள் அமைத்துவிட்டோம் – தேர்தல் பொறுப்புக் குழுக்கள், பணிகளைத்தொடங்கிவிட்டன என்று கூறிக் கொண்டு, இன்னமும்அ.தி.மு.க.வுடன் எங்கள் தோழமை தொடர்கிறது; அவர்கள்அழைப்புக்காக ‘இலவு காத்த கிளியாய்’ காத்திருக்கிறோம்என்று பேசுவது, எந்த ரகப் பேச்சு என்பது எங்களுக்கு விளங்கவில்லை.
2011 தேர்தலில் கேப்டனுக்காகக் காத் திருந்து,தேர்தல் உடன்பாடு கொண்ட ஜெயலலிதா, சட்டமன்றத்தில், விவாதம் ஒன்றில் முதலமைச்சர்ஜெயலலிதாவுக்கும் – கேப்டனுக்கும் இடையேவாக்குவாதம் முற்ற, ஆளும் கட்சியினர் கேப்டனைநோக்கி சப்தமிட, கேப்டன் ஜெயலலிதா முன்னிலையிலேயே எழுந்து, நாக்கைத் துருத்தி – அவர்களைஎச்சரித்ததும், கேப்டன் உட்பட அனைவரையும்அவையை விட்டு வெளியேற்றுமளவு காரசாரவிவாதத்தை நடத்தினார். அவரது கட்சிக்கா இந்தஈனநிலை?.
“அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்திருக்காவிட்டால்,தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு ஒரு இடம் கூடக் கிடைத்திருக்காது” என அவையிலேயே ஓங்கி உரத்த குரலில் கூறி,‘தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர்ந்ததற்காக வெட்கப்படுகிறேன்… வேதனைப்படுகிறேன்’ எனப் பேசிய அ.தி.மு.க.வுடன் – சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேர்ந்தீர்கள். கேப்டன் நல்ல உடல் நிலையோடு இருந்திருந்தால் அதனைஏற்றிருப்பாரா? அப்போதுகூட,கூட்டணிக்காக, கேப்டன்வீடுதேடி எல்லா அரசியல் கட்சித்தலைவர்களும் வந்த நிலைதானே இருந்தது? பாரதிய ஜனதா தலைவர் பியூஷ்கோயல்உட்பட பல தலைவர்கள் கேப்டன் இல்லம் நோக்கி வந்து,தேர்தல் உடன்பாடு பற்றிப் பேசவில்லையா?
அப்படி ‘கேப்டன்’ தலைமையில் தலைநிமிர்ந்து நின்றகட்சிக்கு, இப்போது ஏற்பட்டுள்ள கேவல நிலை தேவையா?இன்றைய தினம் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நிலையும்- கேப்டனுக்கு மட்டுமல்ல; எங்களையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. வெளியே தலைகாட்டவே வெட்கப்படுகிறோம்! இந்த அவலநிலையை, எதிர்நோக்கு முன்பே பலர்நம்மை விட்டு விலகி விட்டனர். மீதமிருக்கும் கொஞ்சம் பேரும்நொந்து நூலாகி வேறுவழியின்றி கழன்று கொண்டிருக்கிறார்கள் என்பதாவது தெரிகிறதா?
தெளிவான அரசியல் முடிவெடுங்கள்!அப்பாவித் தொண்டர்களை ஏமாற்றி அரசியல்வியாபாரத்தில் ஈடுபடாதீர்கள்! கேப்டன்பெயரைக் காப்பாற்றுங்கள்!.- உண்மையுள்ள, கேப்டனின் அபிமானி” என்று அந்த கட்டுரை முடிகிறது.
தேமுதிக வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலேயே தொடரும் என்று பேசப்பட்டு வரும் நிலையில், திமுகவின் முரசொலி நாளேடு, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தை விமர்சித்தும் அவருக்கும் அறிவுரை கூறியும் கட்டுரை வெளியிட்டிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.