Advertisment

ஜெய் பீம் சர்ச்சை: பா.ம.க.வுக்கு எதிராக தி.மு.க விமர்சனம்

ஜெய் பீம் சர்ச்சையில் கடந்த ஒரு வாரமாக மௌனம் காத்து வந்த திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி, நவம்பர் 16, 2021 செவ்வாய்கிழமை, நாளிதழில், ஜெய் பீம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாமகவை மறைமுகமாக கிண்டல் செய்து கடுமையாக விமர்சித்துள்ளது.

author-image
WebDesk
New Update
DMK mouthpiece Murasoli news paper, Murasoli news paper criticize PMK, Murasoli news paper criticize PMK indirectly, Jai Bhim movie controversy, ஜெய் பீம் படத்துக்கு எதிர்ப்பு, பாமகவை கிண்டல் செய்து விமர்சித்த திமுகவின் முரசொலி நாளிதழ், DMK, PMK, Jai Bhim movie

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி, நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாமகவை கிண்டல் செய்து கடுமையாக விமர்சித்துள்ளது. இதனால், எதிர்காலத்தில் பாமகவுடன் திமுக கூட்டணி வைக்காது என்பதற்கான தெளிவான அறிகுறி என்று திமுக தொண்டர்கள் கருதுகின்றனர்.

Advertisment

ஜெய் பீம் சர்ச்சையில் கடந்த ஒரு வாரமாக மௌனம் காத்து வந்த திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி, நவம்பர் 16, 2021 செவ்வாய்கிழமை, நாளிதழில், ஜெய் பீம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாமகவை மறைமுகமாக கிண்டல் செய்து கடுமையாக விமர்சித்துள்ளது. எதிர்காலத்தில் திமுக கூட்டணியில் பாமக இடம் பெறாது என்பதை இந்த விமர்சனம் உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் அதே நேரத்தில் வன்னியர்கள் மற்றும் பாமக தரப்பில் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. 1990களில், விருத்தாச்சலம் பகுதியில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் காவல் நிலையத்தில் போலீஸ் சித்திரவதையில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, வழக்கறிஞரகா இருந்தபோது நீதியைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புணையப்பட்ட ஜெய் பீம் திரைப்படத்தில் என்ற இருளர் பழங்குடி சமுக்கத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்படுகிறார். இந்த வழக்கில் வழக்கறிஞர் சந்துருவாக நடித்துள்ள சூர்யா நீதி பெற்று தருகிறார். இந்த படத்தில் ராஜாக்கண்ணுவை காவல் நிலையத்தில் அடித்து சித்திரவதை செய்யும் எஸ்.ஐ குருமூர்த்தி கதாபாத்திரத்தின் வீட்டில் வன்னியர்களின் அக்னி கலசம் படம் போட்ட காலெண்டர் இடம்பெற்றதால், ஒரு வன்முறை போலீஸை வன்னியராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறி பாமகவினரும் வன்னியர்களும் ஜெய் பீம் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஜெய் பீம் படத்தில் அக்னி கலசம் நீக்கப்பட்டது.

இதனிடையே, பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி, நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதினார். அதற்கு சூர்யாவும் வன்னியர்களை இழிவுபடுத்தும் நோக்கம் எனக்கோ படக் குழுவினருக்கோ இல்லை எந்த நோக்கமும் இல்லை என்று பதில் கடிதம் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து, பாமகவினர் நடிகர் சூர்யாவை மிரட்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பாமக நிர்வாகி ஒருவர் நடிகர் சூர்யாவை உதைத்தால் அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு தரப்படும் என்று கூறியதை அடுத்து, அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திரையுலகில் பலரும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் கௌதமன் போன்றவர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், ஆளும் திமுக ஜெய் பீம் படம் சர்ச்சையில் இதுவரை மௌனம் காத்து வந்த நிலையில், திமுகவின் அதிகாரப் பூர்வ நாளிதழ் முரசொலியில் நவம்பர் 16ம் தேதி வெளியான சிறப்புக் கட்டுரையில், ஜெய் பீம் சர்ச்சையையொட்டி, பாமகவை நகைச்சுவையாகவும் கிண்டாலகவும் விமர்சித்துள்ளது.

முரசொலி நாளிதழில் ‘ஜெய் பீம்’ (சிங்) இது என்ன புதுக்குழப்பம்? என்ற தலைப்பில் வெளியான சிறப்பு கட்டுரையில் இடம் பெற்றிருப்பதாவது: (‘ஜெய் பீம்’ சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த சர்ச்சையின் விளைவாக ஒரு புதிய படத் தயாரிப்பில் நடைபெற்ற கலாட்டா…. கற்பனை)

படத்தின் வில்லனின் வீடு… அது ஒரு பண்ணை பங்களா - காட்சி அமைப்பின்படி பண்ணையார் தனது கூட்டாளிகளுக்கு விருது அளிக்கிறார்… படத்தின் இயகுநர் தனது உதவியாளரை அழைக்கிறார்.

இயக்குநர்:- என்னய்யா… நான் சொன்னபடி எலலம் சரியாயிருக்கான்னு பார்த்திட்டியா… சுவத்டுல ஏதாவது காலண்டரை மாட்டிவைத்து நாளைக்கு படத்துக்கு ஏதாவது தலைவலி உண்டாக் கிடாதே…

உதவி இயக்குநர்:- காலண்டரே மாட்ட வேண்டாம்னு ஆர்ட் டிபார்ட்மெண்டுக்கு சொல்லிட்டேன் சார். அவர்களும் எதையும் மாட்டல.

இயக்குநர்:- அப்ப எல்லாத்தையும் ரெடி பண்ணு…. ஆரம்பிச்சுடலா.

(உதவி இயக்குநர்…. ‘சரி சார்’ என்று கூறிவிட்டு படப்பிடிப்புக்கு பண்ணையார் வேடம் தாங்கியவர் உட்பட அனைவரையும் அழைத்து விருந்து மேஜையைச் சுற்றிப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர வைக்கிறார்.

மேஜையில் கண்ணாடியிலான பழக்கூடையில் பழங்கள் வைக்கப்பட்டுள்ளன…. பிளேட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன…. உணவு பரிமாற ஊழியர்கள் சீருடையோடு நிற்கின்றனர்.)

இயக்குநர்:- எல்லாம் சரியா இருக்குல… ‘டைலாக்’ எல்லாம் சரியா சொல்லிக் கொடுத்துட்டியா….

உதவி இயக்குநர்:- ஓ.கே. சார்…

இயக்குநர்:- சரியா பார்த்துக்கய்யா… ஏடாகூடமா நமக்குத் தெரியாமா எங்கயாவது ஏதாவது இருந்து தொலைஞ்சிடப் போகுது….

உதவி இயக்குநர்:- எல்லாம் சரியா இருக்கு சார்!

இயக்குநர் படப்பிடிப்பைத் துவக்குகிறார். “லைட்ஸ் ஆன்”…. “ஸ்டார்ட் சவுண்டு….” “ஸ்டார்ட் காமரா…. கிளாப்,… ஆக்‌ஷன்” என இயக்குநர் உத்தரவு பிறப்பிக்க, காமிரா ஓடத் துவங்குகிறது.

அப்போது எல்லாவற்றையும் கூர்மையாகக் கவனித்து வந்த உதவி இயக்குநர், அவரையும் அறியாமல் ‘கட்.. கட்’ என சப்தமிட காமிரா நிறுத்தப்படுகிறது. எல்லாம் சரியாக இருக்கும்போது “கட்.. கட்” எனக் கத்திய உதவி இயக்குநரை கோபாவேசத்தோடு இயக்குநர் பார்க்க…

அவர் அருகில் ஓடிவந்த உதவி இயக்குநர் “சார் ஒரு சிறிய தப்பு நடந்துடுச்சு சார்….” என்க…

இயக்குநர்:- எல்லாத்தையும் சரியா பார்க்கச் சொன்னேன். சரியா இருக்குன்னு நீதானே சொன்னே… இப்ப என்னய்யா திடீர்ன்னு தப்பு கண்டுபிடிச்சுட்டே -

உதவி இயக்குநர்:- அது வேறு ஒண்ணுமில்ல சார்… பழக்கூடையிலே மாம்பழம் இரண்டை வெச்சிருக்காங்க சார்…

இயக்குநர்:- பழங்கள் வைத்தால் மாம்பழம் இருக்கிறதுல்ல என்னய்யா தப்பு?

உதவி இயக்குநர்:- தப்பு இல்லை சார்… நாளைக்கு இதை வைச்சு பிரச்சினையை சிலர் எழுப்பிட்டா என்ன பன்றதுனுதான்…

இயக்குநர்:- அதுல என்னய்யா பிரச்சினை…

உதவி இயக்குநர்:- மாம்பழம் ஒரு கட்சி சின்னம் சார்… விருந்து வைக்கும் வில்லன் வீட்டி மாம்பழத்தைக் காட்டி அந்த வில்லனை எங்கள் கட்சிக்காரர் என அடையாளப்படுத்தி விட்டாரகள்…. என்று நாளைக்கு எதிர்ப்பு வரக்கூடாது அல்லவா?

இயக்குநர்:- சரி… சரி…. அதை எடுத்துத் தொலைத்துவிட்டு வேறு ஏதாவது பிரச்சினை இல்லாத பழத்தை வை!

(பின்னர் பழக் கூடையிலிருந்து மாம்பழங்கள் எடுக்கப்பட்டு, வேறு பழங்களை வைத்துவிட்டு படப்பிடிப்பைத் துவக்குகிறார்கள்.)

இயக்குநர்:- இப்ப எல்லாம் சரியாயிடுச்சா…?

உதவி இயக்குநர்:- ஓ.கே. சார்!

இயக்குநர் “லைட்ஸ் ஆன்… ஸ்டார்ட் சவுண்டு… காமெரா” என மீண்டும் உத்தரவு பிறப்பித்து படப்பிடிப்பைத் துவங்குகிறார், ‘ஆக்‌ஷன்…’ எனக்கூற உணவு பரிமாறப்பட்டிருக்கும் இலைஇயின் முன் இரண்டு வாளிகளைக் கையிலேந்தியவாறு…. பரிமாறுபவர், பண்ணையார் அருகே வந்து

“அய்யா…. சாம்பார் போடவா, காரக்குழம்பு போடவா எனக் கேட்க; மீண்டும் உதவி இயக்குநர் “கட்.. கட்…” என குரல் எழுப்புகிறார்.

இயக்குநர்:- என்னய்யா ஆச்சு உனக்கு? எல்லாம் சரியா இருக்குன்னு சொன்னியே…. இப்ப ஏன் ‘கட்’ சொல்ற…

உதவி இயக்குநர்:- ஒண்ணுமில்ல சார், டைலாக்கிலே ஒரு சின்ன தப்பு நடந்திருச்சு….

இயக்குநர்:- சரியாத்தானய்யா சொன்னார்… என்ன தப்பு கண்டுபிடிச்சே….

உதவி இயக்குநர்:- ஒண்ணுமில்லே சார், நாளைக்கு அதைப் பிரச்சினையாக்கி - தியேட்டர் முன்னே வந்து சிலர் கலாட்டா பண்ணக் கூடாது அல்லவா?

இயக்குநர்:- என்ன தப்புன்னு சொல்லித் தொலைய்யா…..

உதவி இயக்குநர்:- பரிமாறுபவர் பண்ணையாரைப் பார்த்து ‘அய்யா…’ன்னு அழைச்சிட்டாரு…

இயக்குநர்:- ‘அய்யா…’ன்னு தானேய்யா எல்லாரும் அழைப்பாங்க… அதிலே என்ன பெரிய தப்பைக் கண்டுபிடிச்சிட்டே….

உதவி இயக்குநர்:- இங்க ஒரு கட்சித் தலைவரை அவரோட கட்சிக்காரர்களெல்லாம் அய்யான்னுதான் சொல்வாங்க… அதனால வில்லன் கேரக்டரை அய்யான்னு அழைச்சு, அழைச்சு எங்கள் தலைவரை வில்லனாக்கி விட்டார்கள் எனப் போராட்டம் ஆரம்பிச்சுடுவாங்களேன்னுதான் சார் “கட்” சொன்னேன்.

இயக்குநர்:- அப்புறம் எப்படித்தானய்யா அழைக்கிறது….

உதவி இயக்குநர்:- அய்யாவுக்குப் பதிலாக ‘எஜமான்’னு மாத்திக்கலாம் சார்….

இயக்குநர்:- மாத்தித் தொலைச்சுக்க….

(தேவையான மாற்றத்திற்குப் பின், ‘ரெடி’ என அறிவிக்கிறார்…. உதவி இயக்குநர்)

இயக்குநர்:- எல்லாம் சரியாயிருக்காய்யா…. இனிமெலாவது ஷுட்டிங்கை ஆரம்பிக்கலாமா….

உதவி இயக்குநர்:- ஆரம்பிக்கலாம் சார்…

(இயக்குநர் மீண்டும் ‘லைட்ஸ் ஆன்’துவக்கி ‘ஆக்‌ஷன்’ வரை சொல்ல படப்பிடிப்புத் துவங்குகிறது.)

உணவு அருந்திக்கொண்டே ஒரு பெரியவர் பண்ணையாரை நோக்கி): என்னங்க… விருந்துக்கு தம்பி வரலையா?

பண்ணையார்:- யாரைக் கேட்கிறீங்க… அன்பு தம்பியையா? அவருக்கு முக்கிய வேலை இருக்குன்னு வெளியே போயிருக்காரு….

(மீண்டும் ‘கட்… கட்…’ அலறுகிறார் உதவி இயக்குநர்)

இயக்குநர்:- இப்ப எதுக்குய்யா… ‘கட்’ சொன்னே?

உதவி இயக்குநர்:- பண்ணையார் மகன் பெயரை அன்புன்னு மாத்தி எழுதச் சொல்லி வசனகர்த்தாகிட்டே அப்பவே சொன்னேன் சார்… அவர் மறந்துட்டாரு போலிருக்கு!

இயக்குநர்:- அந்தப் பேரிலே என்னய்யா; அப்படி பிரச்சினை!

உதவி இயக்குநர்:- பிரச்சினையே அங்கிருந்துதான் சார் உருவாகும்; அந்தப் பேர் வேண்டாம் சார்….

இயக்குநர்:- வேண்டாம்னா… மணி, மூர்த்தின்னு ஏதாவது பெயரை மாத்திக்க… மணியாகுது… சீக்கிரம் மாத்தித் தொலை….

உதவி இயக்குநர்:- சார்… அந்தப் பேர்கலை வச்சாலும் பிரச்சினை வரும் சார், முதல் பேர் அவங்க பொதுச் செயலாளர் பேர்- அடுத்தது அவர்களது முன்னாள் எம்.பி., பேர் சார்…

இயக்குநர்:- ஏம்பா… என்னைப் போட்டுக் குழப்பற…. ஏதாவது வட இந்தியக்காரன் வைச்சு தொலைச்சிடு… பிரச்சினை தீர்திடும்.

உதவி இயக்குநர்:- வைச்சிடலாம் சார்; ஆனா கதையோட ‘நேட்டிவிட்டி’ கெட்டுடுமே சார்…

இயக்குநர்:- பின்ன என்னதான்யா என்ன செய்யச் சொல்றே…. பாலுன்னு பேரை வைச்சிடு… எல்லாக் கட்சியிலும் பாலு இருக்குறாங்கள்ள….

உதவி இயக்குநர்:- உண்மைதான் சார், அந்தப் பேரை வைச்சா திருடன் தலையாரி வீட்டிலே ஒளிஞ்ச கதையாகும் சார்…. எல்லா கட்சியிலும் பாலு இருக்காங்க சார்… ஆனா அந்தக் கட்சி பாலு, அநியாயம்னு அவருக்கே தெரிஞ்சாலும் அதை நியாயப்படுத்தி பேசுவதில் கில்லாடி சார்….

(இயக்குநருக்கு டென்சனில் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குகிறது.
தன் தலைமுடியைப் பிய்த்துக்கொள்வது போல தலையில் கை வைத்துக்கொள்கிறார்….

‘பேக்கப்’ ‘பேக்கப்’ எனக் கத்திக்கொண்டே இருக்கிறார்.)

அப்போது “என்னங்க…. ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா?….” என மனைவி அவரை உலுக்கி எழுப்புகிறார்.

“ஓ ஒண்ணுமில்லே… ‘ஜெய் பீம்’ படத்தைப் பத்தி டி.வி.யிலே விவாதம் பார்த்தேன்… அப்படியே தூங்கிவிட்டேன். சாதி அரசியல் பிழைப்பு நடத்துவோர். இந்த நாட்டைப் படுத்தும் பாட்டுக்கு எப்போதுதான் விடிவு ஏற்படுமோ?

“சாதிப் பிரிவு செய்தோர்
தம்மை உயர்த்துதற்கே
நீதிகள் சொன்னாரடி - சகியே
நீதிகள் சொன்னாரடி”
- புரட்சிக் கவிஞர்” என்று குறிப்பிட்டுள்ளது.

ஜெய் பீம் சர்ச்சை விவகாரத்தில், திமுகவின் முரசொலி இதழ் மறைமுகமாக பாமகவை கிண்டல் செய்து விமர்சித்துள்ளது. இதனால், எதிர்காலத்தில் பாமகவுடன் திமுக கூட்டணி வைக்காது என்பதற்கான தெளிவான அறிகுறி இது என்று திமுக தொண்டர்கள் கருதுகின்றனர். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கான காரணம் ஆளும்கட்சியுடன் கூட்டணி அமைக்கவே வெளியேறியதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

திமுக கூட்டணியில் இருந்து விசிகவை வெளியேற்றுவதே பாமகவின் நோக்கம். எனவே, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி வைக்க திமுக தயாராக உள்ளது என்று வதந்தி பரப்பினார்கள். ஆனால், இப்போது திமுக வருங்காலத்தில் பாமகவுடன் கூட்டணி அமைக்காது என்பது போல இந்த விமர்சனம் வெளியாகி உள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத திமுக நிர்வாகி தெரிவித்தார்.

ஜெய் பீம் படத்துக்கு பாமக எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறுகையில், “2000-களின் தொடக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தை பாமகவினர் எதிர்த்தனர். நெருக்கடியானபோது திமுக மவுனம் காத்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி பிரச்சனையை தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ள அனுமதித்தார். இப்போது பாமகவுக்கு எதிரான சக்திகளைக் கருத்தில் கொண்டு திமுக பிரச்சினையில் குதித்துள்ளது.

மேலும், இதுபோன்ற கட்டுரையை வெளியிட்டதன் மூலம், பாமகவுக்கு எதிராக சிறுபான்மை சமூகங்களை திரட்டும் நடவடிக்கையை திமுக எடுத்து வருகிறது. ஜெய் பீம் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி சமூகத்தின் மத்தியில் தங்கள் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற பாமகவின் நோக்கம் தோல்வியடைந்துள்ளது. இது வன்னியர் அல்லாத சமூகத்தை திமுக பக்கம் தள்ளும் என்று அரசியல் நோக்கர்கல் கருத்து தெரிவிக்கின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema Dmk Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment