தமிழ்நாடு என்ற பெயரை காமராஜர் ஏற்க மறுத்ததால் அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது. அதுபோல் தற்போதும் சிலருக்கு வீழ்ச்சி தொடங்கியுள்ளது என தி.முக. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். நிகழ்ச்சியில் பேசிய ஆ. ராசா, வளர்ச்சி திட்டங்கள் மட்டும் அரசாங்கத்தின் வேலை கிடையாது. காமராஜர் பல நல்ல செயல்கள் செய்துள்ளார். 6 முறை நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் கட்சி தலைவர், 2 பிரதமர்களை உருவாக்கியவர், தமிழ்நாட்டு மக்களை நேசித்தவர் எனப் பல பெருமைகளை கொண்டவர். ஆனால் தமிழ்நாடு என்ற பெயரை அவர் ஏற்கவில்லை. காமராஜருக்கு வீழ்ச்சி தொடங்கியது. அதுபோல் தற்போது தமிழ்நாடு எனக் கூற பயப்படுபவர்களின் வீழ்ச்சி தொடங்கியுள்ளது எனக் கூறினார்.
அண்மையில் ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று கூறினார். இது இந்திய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஆளுநர் மாளிகை பொங்கல் அழைப்பிலும் தமிழகம் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தி.மு.க உள்பட பல அரசியல் கட்சிகள் ஆளுநருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஆளுநர் மாளிகை தமிழகம் சர்ச்சைக்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டு இவ்விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“