Tamilnadu - A RAJA - Udhayanidhi Stalin Tamil News: சனாதன தர்மம் தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவரது பேச்சுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், உதயநிதியின் பேச்சுக்கு ஆதரவாகவும் பலரும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, 'மோடி, அமித்ஷா மற்றும் பா.ஜ.க-வில் உள்ள அனைத்து அமைச்சர்களைவிட வெள்ளைக்காரர்கள் நாணயமானவர்கள், யோக்கியமானவர்கள்' என்றும், 'பொதுவெளியில் சனாதனத்தை பற்றி அமித்ஷா விவாதிக்க தயாரா?' என்றும் சவால் விடுத்துள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/638608cf-061.jpg)
ஆ.ராசா எம்.பி பேசுகையில், “அமித்ஷாவிற்கு புதுச்சேரியில் இருந்து சொல்கின்றேன், பா.ஜ.க-வில் எந்த கொம்பனாக இருந்தாலும் வாருங்கள். டெல்லியில் பொதுவெளியில் லட்சம்பேர் கூடும் இடத்தில் சனாதனம் குறித்து விவாதிக்க நான் தயார்! நீங்கள் தயாரா?
சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான், அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ளார். இல்லையெனில் வேறு வேலைக்கு சென்று இருப்பார். சனாதனத்திற்கு எதிராக நாங்கள் போராடியதால் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஆளுநர்! எங்களால்தான் ஆடு மேய்க்காமல் அண்ணாமலை இன்று ஐ.பி.எஸ். வானதி ஸ்ரீனிவாசன் இன்று வழக்கறிஞர் ஆனார்.
நான் திறந்த வெளியில் சொல்கின்றேன் மோடி, அமித்ஷா, பா.ஜ.க-வில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைவிட வெள்ளைக்காரர்கள் நாணயமானவர்கள், யோக்கியமானவர்கள்" என்று கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநில தி.மு.க சார்பில் கருணாநியின் நூற்றாண்டு விழாவையொட்டி அரியாங்குப்பத்தில் சிலை திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா. சிவா உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டு முன்னாள் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“