இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆ.ராசா ஆவேசமாக பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் கடந்த 6-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தி.மு.க எம்.பி ஆ.ராசா பேசும்போது இந்துக்கள் மற்றும் இந்து மதம் குறித்து பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்தது. மாநிலம் முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இதில் குறிப்பாக பா.ஜ.க சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் ஆ.ராசா மீது புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் கடந்த 2 வாரகாலமாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பற்கேற்ற ஆ.ராசா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள அவர், இப்போது ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் இந்துக்களை புண்படுத்திவிட்டார் என்று சொல்கிறார்கள். மன்னிப்பு கேட்பது பெரிய விஷயம் அல்ல. தப்பு செய்தவன் மன்னிப்பு கேட்டுத்தான் ஆக வேண்டும். நான் மன்னிப்பே கேட்க மாட்டேன் என்று சொன்னால் அவனை விட பெரிய முட்டாள் யாரும் இல்லை. நான் மன்னிப்பு கேட்க தயார் ஆனால என்ன மன்னிப்புன்னு சொல்லுங்க என்று கூறியுள்ளார்.
மேலும் இந்திய அரசியல் சட்டத்தின் படி இந்த மாநிலத்தின் கவர்னராக இருந்து அரசியல் சட்டத்தை காப்பாற்றுவேன் என்று உறுதிமொழி எடுத்த கவர்னர் ஆர்.என்.ரவி அவ்வாறு நடந்துகொண்டாரா என்று கேள்வி எழுப்பிய ஆ.ராசா, உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை. இந்து மதத்தின் பெயரால் சொல்லப்படும் சனாதானத்திற்கு எதிரானவர்கள்" எனக் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil