தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய நபர்கள் பேசிய பழைய வீடியோக்கள் டிரெண்ட் செய்யப்படுவது குறித்த செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் சொன்ன பழமொழி சர்ச்சையாகி உள்ளது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும் மத்திய சென்னை தொகுதி மக்களவை உறுப்பினருமான தயாநிதிமாறன் ஒரு சர்ச்சைப் பேச்சுக்கு பதில் சொல்வதற்காக ஒரு பழமொழி சொல்ல பா.ஜ.க-வினர் அதையும் சர்ச்சையாக்கி உள்ளனர்.
தி.மு.க எம்.பி. தயாநிதி மாறன் 2019-ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில், இந்தி திணிப்பு குறித்து பேசிய வீடியோவை பா.ஜ.க ஐ.டி விங் ட்ரெண்ட் செய்து சர்ச்சையாக்கியது.
அந்த வீடியோவில், “ஆங்கிலம் படித்தவர்கள் ஐடி நிறுவனங்களில் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். இந்தி மட்டும் தெரிந்த பீகார், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தமிழைக் கற்றுக்கொண்டு கட்டுமானப் பணிகள் செய்கிறார்கள், கழிவறை சுத்தம் செய்கிறார்கள், ” என்று பேசியிருந்தார்.
தயாநிதி மாறனின் இந்த பேச்சு இந்தி பேசும் பீகார், உ.பி. மக்களை இழிவுபடுத்துவதாக பா.ஜ.க தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தி.மு.க இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியில் உள்ள இந்தி பேசும் மாநிலத் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி தலைவர்கள் தயாநிதி மாறன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். பழைய வீடியோ பேச்சாக இருந்தாலும், தயாநிதி மாறனின் இந்த கருத்து இந்தியா கூட்டணி தலைவர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய நபர்கள் பேசிய பழைய வீடியோக்கள் டிரெண்ட் செய்யப்படுவது குறித்த செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் சொன்ன பழமொழி சர்ச்சையாகி உள்ளது.
தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய நபர்கள் பேசிய பழைய வீடியோக்கள் டிரெண்ட் செய்யப்படுகிறது, நீங்கள் பேசிய வீடியோவும் ட்ரெண்ட் ஆகியிருந்தது, இது குறித்த உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இதற்கு பதிலளித்த தயாநிதி மாறன், “வேலையில்லா முடி திருத்துநர் பூனையைப் பிடித்து சிரைப்பார்களாம், அதே போலதான், இவர்களைப் பார்த்தீர்கள் என்றால், ஏதாவது ஒரு கலகத்தை உருவாக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஐ.டி. விங், அதிலும் தேசிய அளவில் இந்த ஐ.டி விங்கைச் சேர்ந்தவர்கள் ஏதாவது ஒரு பிரச்னையை உருவாக்கி, அதைப் பெரிதாக்கி, பூதாகரமாக்கி அதில் பலன் பெறலாம் என்று நினைக்கிறார்கள். அது எடுபடாது” என்று கூறினார். அப்போது, அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்தார்.
தயாநிதி மாறன் கூறிய இந்த பழமொழி தொழில் ரீதியாகவும் அந்த தொழிலை செய்பவர்களை இழிவுபடுத்தும் ரீதியாகவும் உள்ளது என்று சர்ச்சையாகி உள்ளது.
“தொழில் ரீதியாக அல்லது மொழி ரீதியாக ஒருவரை இழிவுபடுத்துவது மட்டுமே தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் சிறந்து விளங்குகிறார்” என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தயாநிதி மாறன் பேசிய வீடியோவைப் பகிர்ந்துள்ள பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தொழில் ரீதியாக அல்லது மொழி ரீதியாக ஒருவரை இழிவுபடுத்துவது மட்டுமே தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் சிறந்து விளங்குகிறார்.
தயாநிதி மாறன் மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக, நமது வட இந்திய சகோதர சகோதரிகள் மீது தனது வசைகளைப் பரப்புபவர்களையும் எதிர்வினையாற்றுபவர்களையும் “வேலையில்லா முடிதிருத்தும் வேலை செய்பவர்கள்” என்கிறார்.
இந்த தொடர்ச்சியான இழிவுபடுத்தும் வேலையால், தேர்தல் தோல்வியின் தொடர்ச்சியான சமிக்ஞைகூட ஐ.என்.டி.ஐ கூட்டணி தலைவர்களின் உறுதியை அசைப்பதாகத் தெரியவில்லை என்பது தெளிவாகிறது.” என்று சாடியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“