தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் மற்றும் அவருடைய மனைவி சேர்ந்து பயன்படுத்தி வந்த இணைப்பு வங்கி கணக்கில் இருந்து ரூ.99,000 எடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் கடந்த 9.10.2023-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றைக் கொடுத்திதுள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: “நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். நான் தி.மு.க.வில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளேன். நானும் எனது மனைவியும் சேர்ந்து ஜாயின்ட் அக்கவுண்ட்டை கோபாலபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறோம். கடந்த 8.10.2023-ம் தேதி மாலை 4.10 மணியளவில் மலேசியாவிலிருக்கும் என் மனைவிக்கு தெரியாத போன் நம்பர்களில் இருந்து மூன்று தடவை போன் அழைப்பு வந்திருக்கிறது. அதில் இந்தியில் பேசியவர்கள், வங்கியில் இருந்து பேசுவதாகவும், ரூ.99,000 பணபரிவர்த்தனை உங்களால் செய்யப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பினார்கள். எனது மனைவி எந்தவித ஓடிபி நம்பரையும் ஷேர் செய்யாத நிலையில், எங்கள வங்கி கணக்கிலிருந்து 99 ஆயிரம் ரூபாய் ஒரே தடவையாக எடுக்கப்பட்டிருப்பதாக எஸ்.எம்.எஸ் வந்தது. எனவே சம்பந்தப்பட்ட மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பணம் எடுக்கபட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பர் தன்னுடையது தான் என்றும், தனது மனைவியின் மொபைல் நம்பர் இல்லை என்றும் தனது புகாரில் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“