அரக்கோணம் தொகுதியின் தி.மு.க எம்.பி எஸ். ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை இயக்குனரகம் 2002-ம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், பதிவு செய்த அமலாக்க வழக்கை (இ.சி.ஐ.ஆர்) சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் ஆர்.எம்.டி. டீக்கா ராமன் அமர்வு 2020 முதல் நிலுவையில் இருந்த ஜெகத்ரட்சகன் மனுவை விசாரணைக்கு அனுமதித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குரோம் லெதர் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை அபகரித்ததாக ஜெகத்ரட்சகனுக்கு எதிராக சி.பி.சி.ஐடி இரண்டு வழக்குகளின் அடிப்படையில், ஜூன் 12, 2020 அன்று பதிவு செய்யப்பட்ட அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி, சி.பி.சி.ஐ.டி பதிவு செய்த இரண்டு எஃப்.ஐ.ஆர்-களை ரத்து செய்து உத்தரவிட்டார். எனவே சமீபத்தில் வழங்கிய தீர்ப்பைக் கருத்தில் கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று இந்த நீதிபதிகள் அமர்வு, உச்சநீதிமன்றம் விஜய் மதன்லால் சவுத்ரி வழக்கில் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டியது.
மூத்த வழக்கறிஞர் சி.மணிசங்கர் மற்றும் வழக்கறிஞர் என்.செந்தில் குமார் ஆகியோரின் கருத்துகளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, குற்றம் நடந்ததாக அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே தொடங்கிய விசாரணையை அமல்லாக்கத்துறை இயக்குநரகம் மேலும் தொடர அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”