திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், தான் பாஜகவில் இணைய உள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் பாஜகவில் இணைய உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டது. இதனால், தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே, திமுகவில் இருந்து வி.பி.துரைசாமி, திமுக எம்.எல்.ஏவாக இருந்த கு.க.செல்வம் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். இந்த சூழலில், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் பாஜகவில் இணையவுள்ளதாக சமூக ஊடகங்களில் பேச்சு எழுந்தததால் அரசியல் களத்தில் விவாதமானது.
இதையடுத்து, தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளதாக திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நேற்று (08.03.2021) முதல் சில சமூக வலைதளங்களில் சில தவறான செய்திகள் என்னைப் பற்றி பரப்பப்படுகிறது.
எங்கள் கழகத் தலைவரும் குடும்பத் தலைவருமாகிய மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
இன்று காலை (09.03.2021) கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் கட்டளையை சிரமேற்கொண்டு புதுவை மாநில சட்டமன்றத்தேர்தல் குறித்து எங்கள் தோழமைக் கட்சியான காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தேன்.
என் மீது சமூக வலைதளஙக்ளில் வருகின்ற தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இது குறித்து சைபர்-கிரைமில் புகார் அளித்துள்ளேன். நான் என்றைக்கும் கோபாலபுரத்து காவல்காரன்” என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும், சைபர் கிரைமில் புகார் அளித்ததற்கான புகார் பதிவு எண்ணையும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்து களம் இறங்கி ஜெகத்ரட்சகன் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. அதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து, திமுகவும் ஜெகத்ரட்சகனும் அந்த தகவலை மறுப்பு தெரிவித்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"