ஹத்ராஸில் தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற திமுக எம்.பி கனிமொழி கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசம், ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் ஆதிக்க சாதி ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிரச் செய்தது. ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உ.பி. போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து இந்த சம்பவம் தேசிய அளவில் பெரிய கவனத்தைப் பெற்றது. பின்னர், உ.பி காவல்துறையின் கட்டுப்பாடுகளைக் கடந்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
இதனிடையே, நாடு முழுவதும் ஹத்ராஸ் கூட்டு பாலியல் கொலை சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகல், இயக்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஹத்ராஸ் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஹத்ராஸ் சம்பவத்துக்கு நீதி கேட்டு சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி திமுக மகளிரணி செயலாலர் கனிமொழி எம்.பி தலைமையில் ஒளி ஏந்தி பேரணி நடைபெறும் என்று அறிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/New-Project-2020-10-05T205354.199-300x167.jpg)
அதன்படி, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி திமுக மகளிரணியினர் நீதி கேட்டு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர். இந்த பேரணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
திமுக எம்.பி கனிமொழி பேரணி தொடங்கும்போது பேசியதாவது, “உ.பி.யில் பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது, பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை. பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது” என்று கூறினார்.
ஹத்ராஸ் சம்பவத்துக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றபோது திமுக எம்.பி கனிமொழி மற்றும் திமுக மகளிரணியினர் பலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட எம்.பி கனிமொழி மற்றும் திமுக மகளிர் அணியினர் சமுதாயக் கூடத்தில் வைக்கப்பட்டனர். பின்னர், அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"