பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை 18 வயதில் இருந்து 21 வயதாக உயர்த்தும் மசோதாவை ஆராயும் நாடாளுமன்றக் குழுவில் ஒரு பெண் எம்பி மட்டும் இடம் பெற்றுள்ளதற்கு திமுக எம்பி கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்றத்தில் மொத்தம் 110 பெண் எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால், நாட்டிலுள்ள ஒவ்வொரு இளம் பெண்ணையும் பாதிக்கும் ஒரு மசோதாவை ஆய்வு செய்யும் பணியை 30 ஆண்கள் மற்றும் ஒரு பெண் எம்.பி.க்கள் மட்டுமே கொண்ட குழுவிற்கு ஒதுக்க அரசாங்கம் தேர்வு செய்துள்ளது. ஆண்கள் பெண்களின் உரிமைகளை தீர்மாணிப்பதை தொடர்வார்கள் என்றால், பெண்கள் வாய்மூடி பார்வையாளர்களாக ஆக்கப்படுவார்கள்” என்று திமுக எம்.பி கனிமொழி திங்கள்கிழமை தெரிவித்தார்.
31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழுவில் ஒரே ஒரு பெண் எம்.பி மட்டுமே உள்ளார் என்பது வெளியானதைத் தொடர்ந்து கனிமொழியின் கருத்துகள் வெளியாகியுள்ளன. பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை தற்போது உள்ள 18 வயதில் இஇருந்து 21 வயதாக உயர்த்தும் குழந்தை திருமண தடை (திருத்த) மசோதாவை பாஜக எம்பி வினய் சஹஸ்ரபுத்தே தலைமையிலான குழு ஆய்வு செய்கிறது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யான சுஷ்மிதா தேவ், கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் உள்ள ஒரே பெண் எம்.பி.யாக உள்ளார். இந்த குழு ராஜ்யசபாவால் நிர்வகிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஜெயா ஜெட்லி கமிட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில் பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயது உயர்த்தப்பட உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"