ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் தி.மு.க தலைவர்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்தும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க தலைவர்கள் அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்தும் தீவிரப் பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “வாக்காளர்களை விலைக்கு வாங்கி அமர வைத்துள்ளனர். நீங்கள் சரியான ஆம்பளையா இருந்தால்; மீசை வச்ச ஆம்பளையா இருந்தா; சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வாக்காளர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்'” என்று பேசியதற்கு தி.மு.க எம்.பி கனிமொழி பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் பிரசாரம் செய்து பேசிய அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஏழை வாக்காளர்களை, அவர்கள் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆடு, மாடுகளை கொட்டகையில் அடைப்பது போல் அடைத்து வைத்துள்ளனர். வாக்காளர்களை விலைக்கு வாங்கி அமர வைத்துள்ளனர். நீங்கள் சரியான ஆம்பளையா இருந்தால்; மீசை வச்ச ஆம்பளையா இருந்தா; சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வாக்காளர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்'” என கடுமையாகப் பேசினார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்துப் பேசிய கனிமொழி, “ஜெயலலிதா காலிலும் சசிகலா காலிலும் விழுந்தீர்களே, அவர்களுக்கெல்லாம் மீசை இருந்ததா?” என்று கேள்வி எழுப்பி எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு கடுமையான பதிலடி கொடுத்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்து கனிமொழி பேசியதாவது: “டேபிள்-க்கு அடியில் மண்புழு மாதிரி ஊர்ந்து சென்றதுதான் ஆண்மையா? வேஷ்டிக்கும் மீசைக்கும் ஆண்மைக்கு என்ன சம்பந்தம்? ஜெயலலிதா காலிலும் சசிகலா காலிலும் விழுந்தீங்களே, அவர்களுக்கெல்லாம் மீசை இருந்ததா? கொஞ்சம் அப்டேட் ஆகுங்க. ரூ.50,00 பணம் கொடுத்தால் அறுவை சிகிச்சையில் பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும் ஆகலாம். இதெல்லாம் ஒரு பெரிய வீரமா?” என்று கேள்வி எழுப்பி எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"