DMK MP Kanimozhi | Pm Modi Speech: தமிழ்நாட்டிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வந்துள்ளார். நேற்று கேரளாவில் இருந்து கோவை வழியாக திருப்பூர் வந்த மோடி பல்லடம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடி சென்ற மோடி அங்கு நடைபெற்ற விழாவில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
நெல்லையில் மோடி பேச்சு
இதனையடுத்து, பிரதமர் மோடி திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டையில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அதில் பேசிய பிரதமர் மோடி, தமிழக அரசுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை. மத்திய அரசு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் தமிழக அரசு குறை சொல்கிறது. தி.மு.க.வும் காங்கிரசும் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறது. தி.மு.க, காங்கிரஸ் அகற்றப்பட வேண்டிய கட்சிகள்.
தேர்தலுக்கு பிறகு தேடினாலும் தி.மு.க. கிடைக்காது, முற்றிலும் அகற்றப்பட வேண்டிய கட்சி தி.மு.க. மத்திய அரசுக்கு ஒத்துழைப்பே தராத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. நாட்டைக்கொள்ளையடிப்பதற்காகத்தான் வளர்ச்சித்திட்டங்களை தடுத்து வருகின்றனர்.
ராமருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் என தி.மு.க.வினர் கேள்வி கேட்கின்றனர். ராமர் கோவில் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள விளம்பரத்தில் சீனாவின் ராக்கெட்டை தி.மு.க. பயன்படுத்தி உள்ளது.
தி.மு.க. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியிலேயே தி.மு.க.வினர் குறியாக இருக்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்யப்போகிறார்கள் எனக்கேட்டால் தி.மு.க.விடம் பதில் இருக்காது.
வாரிசுகளுக்காக அவர்கள் இருக்கிறார்கள், ஆனால் உங்களுக்காக நான் இருக்கிறேன். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தி.மு.க.வும் காங்கிரசும் சம்பாதிக்க நினைக்கின்றன. சுயநலமிக்கவர்களை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள். குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்." என்று கூறினார்.
கனிமொழி பதிலடி
இந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தி.மு.க எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். ‘பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம்’ என பெயர் வைத்து ஸ்டிக்கர் ஒட்டுவது பா.ஜ.க தான்' என்றும், 'தி.மு.க காணாமல் போகும் என சொன்னவர்கள் தான் காணாமல் போயுள்ளார்கள்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தி.மு.க எம்.பி. கனிமொழி பேசியது பின்வருமாறு:-
குலசேகரப்பட்டினம் திட்டம் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை தி.மு.க. அரசு தொடர்ந்து எடுத்தது. குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்கு அடிக்கல், தி.மு.க அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கால்வாசிதான் மத்திய அரசு நிதி வழங்குகிறது. முக்கால்வாசி மாநில அரசு நிதியில்தான் அது நடைமுறைப் படுத்தப்படுகிறது. பிற மாநிலங்களில் இருந்து வந்து இத்திட்டத்தை பார்வையிடும் எம்.பி.க்கள் 'இதை ஏன் முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டம் என குறிப்பிடப்படவில்லை' என கேள்வி எழுப்புகின்றனர்.
மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. நல்ல திட்டங்களை தி.மு.க. எப்போதும் எதிர்ப்பதில்லை. தேர்தல் நேரம் என்பதால் திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இதுவரை தமிழக முதலமைச்சர் வைத்த ஒரு கோரிக்கையை கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
தி.மு.க காணாமல் போகும் என சொன்ன நிறைய பேரை பார்த்துள்ளேன். அவர்கள்தான் காணாமல் போயுள்ளார்கள். தி.மு.க தொடர்ந்து இருந்து கொண்டு வருகிறது. அயோத்தி ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்யவில்லை. மீனவர்கள் பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்தே வெளிநடப்பு செய்தோம்.
குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலத்தை மாநில அரசுதான் வழங்கியது. மேடையில் எங்களது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை முதலமைச்சரின் கனவு திட்டம் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்றோம். அரசியல் வேறு, மதம் வேறு என்பதை உணர்ந்தவர்கள் தமிழக மக்கள். தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் இயக்கம் தி.மு.க. என்பதை மக்கள் அறிவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.