இந்த சமூகம் சமமான சமூகமாக இருக்க வேண்டும், ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல், ஜாதி மதம் என்ற பாகுபாடுகள் இல்லாமல், சுயமரியாதையுடன் கூடிய சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே தந்தை பெரியாரின் கனவாக இருந்தது என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறினார்.
மார்ச் 15-ம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பெரும்புதூர் அருகில் பென்னலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரில் நடைபெற்ற BIS இம்ப்ரிண்ட் நிகழ்வில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு, தரம் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார்.
/indian-express-tamil/media/media_files/2025/02/14/kanimozhi-bis-2-479402.jpeg)
மேலும், நுகர்வோர் விழிப்புணர்வுக்காக BIS-இன் தமிழ் காமிக் புத்தகங்களை வெளியிட்டார். தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய முத்திரையைக் கல்லூரியின் வழியாக கனிமொழி எம்.பி வெளியிட்டார்.
இந்த விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் கனிமொழி எம்.பி பேசியதாவது; நாம் பிறந்த அடுத்த நொடியிலிருந்து இறப்பது வரை, நுகர்வு தன்மை என்பது நமது வாழ்க்கையில் மிக முக்கியம். அதனை, முடிவு செய்யும் இடத்தில் நாம் இருக்கவேண்டும். ஏனென்றால் பொருட்களின் தரம் என்பது முக்கியம். உற்பத்தி செயல்முறை முழுவதுமாக நுகர்வோரின் நன்மைக்காக இருக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/14/kanimozhi-bis-4-200941.jpeg)
வெளிநாடுகளில் தயாரிக்கக்கூடிய சாக்லேட்டுக்கும், இந்தியாவில் உற்பத்தி செய்கிற சாக்லேட்டுக்கும் உள்ள சர்க்கரையின் அளவின் வித்தியாசத்தை நாம் கவனமாகப் பார்க்கவேண்டும். நமக்கு ஒரு ஒரு பொருள் விற்கப்படுகிறது என்றால் அந்த பொருள்களில் எதை எல்லாம் சேர்த்துள்ளார்கள் என்பதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.
பல நேரங்களில், வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இங்கே விற்கப்படுவதை நாம் பார்த்துள்ளோம். நுகர்வோரின் நலன் கருதி, நாம் வாங்கும் பொருட்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முழு அதிகாரம் இருக்கிறது. மேலும், பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வு என்பது மிக முக்கியமான விஷயம்.
/indian-express-tamil/media/media_files/2025/02/14/kanimozhi-bis-1-664754.jpeg)
சில நபர்கள் பெரிய நிர்வாகத்தின் மூலம் சமூக வலைத்தளங்களின் வாயிலாகப் பொய்யான செய்திகளைப் பரப்பிக்கொண்டு இருக்கின்றார்கள். இதில், நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்து உண்மை என்ன? பொய் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/14/kanimozhi-bis-3-513638.jpeg)
உதாரணத்திற்கு, AI தொழில்நுட்பத்தின் மூலம் பெரியார் அவர்கள் சொல்லாத பல கருத்துக்களை அவர் சொன்னதாக சொல்லி, தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தொடர்ந்து பொய்யான கருத்துக்களைப் பரப்பிக் கொண்டு இருக்கின்றார்கள். பெரியாரின் வாழ்கை பயணம் என்பது இந்த சமூகம் சமமான சமூகமாக இருக்க வேண்டும் என்றும், ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல், ஜாதி மதம் என்ற பாகுபாடுகள் இல்லாமல், சுயமரியாதையுடன் கூடிய சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே தந்தை பெரியாரின் கனவாக இருந்தது.
அதைக் கொச்சைப்படுத்தும் வகையில், தொடர்ந்து ஊடகங்கள் வழியாக சமூக வலைத்தளம் வழியாகப் பொய்யான கருத்துகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதனைப் போலத்தான், பொருட்களைப் பற்றியும் நீங்கள் முயற்சி செய்து, எது உண்மை எது பொய் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என பேசினார்.
க.சண்முகவடிவேல்