/indian-express-tamil/media/media_files/2024/12/12/nHsGX8Qq0roMaq0pnfyA.jpg)
கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் விதி 377ன் கீழ், தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி இன்று எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ள விவரம் வருமாறு;
கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சபையின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். கீழடி அகழ்வாராய்ச்சி 2014-15 மற்றும் 2015-16 ஆகிய இரண்டு கட்டங்களாக ஒரு தொல்பொருள் ஆய்வாளரின் கீழ் நடத்தப்பட்டது, அவரை ஒன்றிய அரசு பாதியிலேயே மாற்றியது. பின்னர், முக்கியமான கண்டெடுப்புகள் எதுவும் இல்லை என்று கூறி மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியை நிறுத்தியது.
2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை இந்தப் பணியை மேற்கொண்டு, இதுவரை 15,000க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி கி.மு 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு செழிப்பான நகர்ப்புற நாகரிகம் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு கட்ட அகழ்வாய்வுகளின் விரிவான அறிக்கை 2023 ஜனவரியில் அத்தொல்லியலாளர் மூலம் இந்தியத் தொல்லியல் ஆய்வு அமைப்பிடம் (ASI) சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ASI 2025 மே 21-ஆம் தேதி திருப்பி அனுப்பி, மேம்படுத்தி மீண்டும் சமர்ப்பிக்கக் கோரியது.
இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள், அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிக்ஸ் (Beta Analytics) போன்ற பன்னாட்டுத் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் நடத்தப்பட்ட கார்பன்-டேட்டிங் உள்ளிட்ட அறிவியல் முறைகளை அடிப்படையாகக் கொண்ட சான்றுகளைக் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், பல நிபுணர்கள் இந்த அறிக்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனவே, கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மேலும் தாமதப்படுத்தாமல் விரைவில் வெளியிடுமாறு ஒன்றிய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.