நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் தி.மு.க. அயலக அணிச் செயலாளராகவும் இருப்பவர் எம்.எம் அப்துல்லா. இந்நிலையில், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு அவர் எழுதியுள்ள கடித்ததில், மக்களவை கட்டிடத்திற்குள் சென்ற தன்னிடம் சி.ஐ.எஸ்.எப் பணியாளர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசு தலைவருமான ஜெகதீப் தங்கருக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில், "நேற்றைய தினம் 18/06/2024 பாராளுமன்ற கட்டிடத் வளாகத்தில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
மதியம் 2.40 மணியளவில், நான் பார்லிமென்ட் ஹவுஸ் தோட்டத்திற்குள் நுழைந்தபோது சி.ஐ.எஸ்.எப் பணியாளர் என்னை நிறுத்தினார். அப்போது மக்கள் மற்றும் தமிழக அரசின் நலன்களை நான் பிரதிநிதித்துவப்படுத்தும் இடமான நாடாளுமன்றத்திற்கு நான் சென்றதன் நோக்கம் குறித்து என்னிடம் கேள்வி எழுப்பிய சி.ஐ.எஸ்.எப் பணியாளர்களின் இந்த நடத்தையால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.
பாதுகாப்பு பொறுப்பில் இருந்தவர்களால் இது போன்று இதற்கு முன்பு தவறாக நடத்தியதில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட நிகழ்வுகள் ஏதும் இல்லாவிட்டாலும் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன். எனவே, சி.ஐ.எஸ்.எப் பணியாளர் என்னை விசாரித்த விதத்தை என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.
அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துள்ளது. மாநிலங்களவை மற்றும் அதன் உறுப்பினர்களின் பாதுகாவலர் என்ற முறையில், சி.ஐ.எஸ்.எப் பணியாளர்களின் இந்த முன்னோடியில்லாத தவறான நடத்தையை உணர்ந்து, தவறு செய்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாநிலங்களவை மற்றும் அதன் உறுப்பினர்களின் கண்ணியத்தை நிலைநாட்டவும் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“