திமுக எம்.பி டாக்டர் செந்தில்குமாரும் பாஜக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையும் இந்தி திணிப்பு விவகாரம் குறித்து ஊடகங்களில் நேரலையில் விவாதிக்கத் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், விவாதம் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
தருமபுரி தொகுதி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார் சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாக செயல்படுபவர். தொகுதியில் எந்த பொதுப் பிரச்னையாக இருந்தாலும் அவரை ட்விட்டரில் டேக் செய்து பதிவிட்டால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அண்மையில் பாஜகவில் இணைந்து கவனத்தைப் பெற்றுள்ளார். ஊடகங்களில் பாஜகவை தீவிரமாக ஆதரித்து பேசி வருகிறார். அவருக்கு பாஜகவில் மாநில துணைத்தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மும்மொழிக் கொள்கை இந்தி திணிப்பை நோக்கமாகக் கொண்டது என்று விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை ஒரு பேட்டியில் தமிழகத்தில் இந்தி திணிப்பு விவகாரம் குறித்து திமுகவைச் சேர்ந்த எவருடனும் நேரடியாக விவாதிக்கத் தயார் என்று கூறினார்.
அண்ணாமலை பேசியதை சமூக ஊடகங்களில் சிலர் திமுக எம்.பி. செந்தில்குமாரை டேக் செய்து பதிவிட்டனர். இதையடுத்து, செந்தில்குமார், தான் இந்தி எதிர்ப்பு விவகாரம் குறித்து அண்ணாமலையுடன் விவாதிக்கத் தயார் என்று பதிவிட்டார்.
அண்ணாமலையின் சவாலை திமுக எம்.பி செந்தில் குமார் ஏற்றுக்கொண்டதையடுத்து, ட்விட்டரில் பதிலளித்த அண்ணாமலை, நானும் இந்த சவாலை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு நடுநிலையான ஊடகம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பதிவிட்ட, அண்ணாமலை, எங்களுக்கு ஒரு தொலைக்காட்சி சேனல் அணுகுவதற்கு தேவை. எங்களுக்கு எந்த தொலைக்காட்சி சேனலும் சொந்தமாக இல்லை. விவாதம் நாகரிகமாகவும் கண்ணியமாகவும் நடைபெற ஒரு நெறியாளர் வேண்டும். யாராவது எங்களை தொடர்புகொண்டால், நாங்கள் முடிவு செய்வோம். காத்திருக்கிறேன் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை மற்றொரு ட்விட்டில், ஒரு தொலைக்காட்சி சேனல் உங்களுடனும் என்னுடனும் பேசியுள்ளது. நான் அவர்களிடம் சம்மதம் தெரிவித்துள்ளேன் என்று பதிவிட்டார்.
பாஜக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையின் சவாலை ஏற்றுக்கொண்ட திமுக எம்.பி செந்தில்குமார், ஏற்கெனவே என்னிடம் 4 டிவி சேனல்கள் பேசியுள்ளனர். நான் அவர்களிடம் உங்களுடைய நேரத்தை கேட்கச் சொல்லியிருக்கிறேன். எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. உங்களுடைய விருப்பம். நேரலையில் இருக்கும். விவாதம் நாகரிகமாகவும் கண்ணியமாகவும் இருக்கிறேன் என்று உறுதியளிக்கிறேன். உங்களால் அதே போல உறுதி அளிக்க முடியுமா? என்று கேட்டுள்ளார்.
அண்ணாமலை தான் விவாதிக்கத் தயார் என்றும் சில தேதிகளையும் நேரத்தையும் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, செந்தில்குமார் அண்ணாமலைக்கு பதில் அளிக்கையில், “10 ஊடகவியலாளர்கள் என்னிடம் பேசிவிட்டனர். நான் அவர்களிடம் உங்களிடமும் பேசி ஒருங்கிணைக்க கேட்டுக்கொண்டேன். நான் டெல்லிக்கு போக வேண்டியுள்ளதால் குறைவான நேரமே உள்ளது. இந்த விவாதத்தை இன்று மாலை அல்லது அதிகபட்சம் நாளையுடன் முடித்துக்கொள்ள வேண்டும். நேருக்கு நேராக விவாதிக்கத் தயார். உங்களுக்கு ஏதேனும் வேலை இருக்குமாயின், எனக்கு நீங்கள் இருக்கும் இடத்திற்கு வருவதற்கு எந்த பிரச்னையும் இல்லை” என்று அண்ணாமலைக்கு பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளதால், திமுக எம்.பி செந்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அவர் டெல்லி செல்ல உள்ளதாக ஊடகங்களிடம் தெரிவிவித்துள்ளார். மேலும், அண்ணாமலை குறிப்பிட்டுள்ள தேதிகளில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுவது தெரிகிறது.
செந்தில்குமாரின் ட்விட்டுக்கு பதிலளித்த அண்ணாமலை, “விவாதத்தை யார் தவிர்க்கிறார்கள் என்பதை முடிவு செய்ய மக்களிடமே விட்டுவிடுகிறேன். நான் உங்களுக்கு வாய்ப்புள்ள 6 தேதிகளை தெரிவித்துள்ளேன். அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. நன்றி, நீங்கள் விரும்பும்போது நான் அடுத்த வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்.” என்று பதில் அளித்துள்ளார்.
அண்ணாமலையின் இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள எ.பி. செந்தில்குமார் “ விவாதம் நடத்த தந்தி டிவி முடிவு செய்துள்ளது. அசோகா நெறியாளராக இருப்பார். அவர்கள் நேற்று 6-7 மணி பிரைம் டைமில் விவாதத்துகு தயாராக இருந்தார்கள். நான் இதை மேலும் ஒரு நாள் தள்ளிப்போடலாம் என்று கூறினேன். ஆனால், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது அவர்கள் இந்த யோசனையை கைவிட்டுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
செந்தில்குமார் மற்றொரு ட்விட்டில், “சார் நீங்கள் நாடாளுமன்றம் நடக்கும்போது உள்ள தேதிகளை விட்டுவிடுங்கள், சனி, ஞாயிறுகளில்கூட நாடாளுமன்றம் நடக்கிறது. அதனால், நான் குறிப்பிட்ட தேதியை கொடுங்கள். நான் தெளிவாக தெரிவித்தேன் இல்லையா? எனக்கு அதிகபட்சம் இன்று மாலை வரைதான் நேரம் உள்ளது. உங்களுக்கு வேலை இருந்தால் நான் விவாதிப்பதற்கு உங்கள் இடத்துக்கே வருகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக, இந்தி திணிப்பு பற்றி திமுக எம்.பி செந்தில்குமாருக்கும் பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலைக்கு இடையான விவாத சவால் உரையாடல் நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட நூற்றாண்டு கால இந்தி எதிர்ப்பு வரலாற்றைக் கொண்ட தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிப்பு பற்றி மத்தியில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலைக்கும் திமுக எம்.பி செந்தில்குமாருக்கும் இடையே விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு விவாதம் நடைபெறுமா நடைபெறாதா என்று கணிக்கமுடியவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook