தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர். பாலு மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்தி வருவதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், திமுக எம்.பி டி.ஆர். பாலு விதி எண் 191-ன் கீழ் மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதில், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200-ன் படி ஆளுநர் தனக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற தவறுகிறார். இதன் மூலம், அரசியலமைப்பு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துக்கிறார். குறிப்பாக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறார். ஒரு சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஒப்புதல் அளிக்க அனுப்பாமல் காலம் தாழ்த்துகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். அதனால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர். பாலு மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”