பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க வேண்டும் என தி.மு.க நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றம் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்ட தமிழக எம்.பி.,க்களான கனிமொழி, ஜோதிமணி, சுப்பராயன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ”பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க வேண்டும். அறிக்கை அளிக்க வேண்டும். அதில் அத்துமீறியவர்கள் யார், எப்படி உள்ளே வந்தார்கள், உள்ளே வர யார் காரணம், யாரைத் தண்டிக்க போகிறீர்கள் என விளக்கம் வேண்டும்.
விசாரணை நடத்துவதாக கூறுகின்றனர். என்ன விசாரணை நடத்துகிறார்கள் என தெரியவில்லை. நிர்வாக விசாரணை தேவையில்லை. குற்றம் நடந்துள்ளது. குற்றவியல் விசாரணை தேவை.
பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்க மறுக்கின்றனர். அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் வாங்கித் தந்த எம்.பி.யின் பெயரைக் கூற சபாநாயகர் மறுக்கிறார். பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து கொடுத்த நோட்டீஸை காற்றில் பறக்கவிட்டனர்.
இப்போது வரை 15 எம்.பி.,க்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். நாளைக்கு எங்களையும் சஸ்பெண்ட் செய்வார்கள். அனைத்தும் அவசர அவசரமாக செய்வதால் தவறு நடக்கிறது. பாராளுமன்ற பாதுகாப்பு பணியாளர்களுக்கான 125 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 301 பேரில் 176 பேர்தான் பணியில் உள்ளனர். இதுவே எதிர்க்கட்சி எம்.பி பரிந்துரையில் குற்றவாளிகள் உள்ளே வந்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா?.” இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“