திமுக பொருளாளரும் திமுக எம்.பி.யுமான டி.ஆர். பாலு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசியதாவது: “திமுகவின் கலைஞர் ஆட்சி நிறுவப்படுவதற்கு முன்னால், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். திமுக மட்டுமல்ல, கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் போன்ற கட்சிகளும், மாநிலத்தில் இருக்கின்ற எதிர்க்கட்சி அதிமுக இயக்கமும் ஒட்டுமொத்தமாக, நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டத்தை கொண்டுவந்து அந்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று எல்லொரும் மிகவும் முன்னெச்சரிக்கையோடு சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அதிமுக கொண்டுவந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் போய்விட்டது. அதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு திமுக கொண்டுவந்த அந்த மசோதாவை, ஏகமனதாக, தமிழக மாமன்றத்தில் 13.09.2021 அன்று நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா, 18.09.2021 அன்று ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆளுநர், அந்த மசோதாவை சட்டமாக ஆக்குவதற்கு, அவருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் 200, 201 ஷரத்துகளின் அடிப்படையில், அவர் உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி, அவர் உடனடியாக, உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து குடியரசுத் தலைவர் 254வது பிரிவின் கீழ் ஒப்புதல் வழங்குவார். இதுதான், வழக்கமான நடைமுறை. ஆனால், மசோதா நிறைவேற்றப்பட்டு 4 மாதம் போய்க்கொண்டிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், தமிழக முதல்வர் அமைச்சர்களை அனுப்பி வைத்தார். நவம்பர் 27ம் தேதி முதல்வர் நேரடியாக ஆளுநரை சந்தித்து இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கூறினார்.
அதற்கு பிறகும், ஆளுநர் இன்று வரை, அந்த மசோதாவை, மத்திய அரசுக்கோ, குடியரசுத் தலைவருக்கோ அனுப்பி வைக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அவருக்கும் தெரியும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில், முதல்வர் எப்படி பதவியேற்றுக்கொண்டாரோ, இங்கே இருக்கிற அனைத்து எம்.பி.க்களும் எப்படி அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பதவி ஏற்றுக்கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்களோ, அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க வந்த நமது ஆளுநர் அரசியல் சட்டத்தை குழிதோண்டி புதைத்திருக்கிறார். இந்த மசோதா என்பது சாதாரண மசோதா அல்ல, ஏறத்தாழல், 13 உயிர்களை பலிகொண்டு இந்த நாட்டில் மருத்துவர்களாகி இருக்கக்கூடியவர்களின் வாழ்வை சூறையாடிய நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சி என ஒற்றுமையாக நீட் விலக்கு மசோதா அனுப்பப்பட்டது. அதற்கு இதுவரை எந்தவித ஒப்புதலும் அளிக்கப்படவில்லை.
அதற்கு, முழுமுதல் காரணமே நம்முடைய ஆளுநர் என்பதுதான் என்பது நாட்டுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்பதல்ல, அது எல்லோருக்கும் புரிந்த செய்திதான். அதற்கு உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என்பதற்காகத்தான் கடந்த 10 நாட்களாக, அவரிடம் தேதி வாங்கி அவரிடம் நேரடியாக சந்திக்க கடண்த டிசம்பர் 29ம் தேதி 12 மணிக்கு வாருங்கள் என்று சொன்னார்கள். 12 மணிக்கு நாங்கள் அங்கே சென்று காத்திருந்தோம். அப்போது, நீங்கள் வர வேண்டாம், வேறு ஒரு நாளில் உங்களுக்கு நேரம் ஒதுக்கித் தருகிறோம் என்று சொன்னார்கள். ஆனால், எங்களை அழைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் நாங்கள் கடிதம் எழுதுவதும் தொலைபேசியில் பேசுவதும் என்று பலமுறை முயற்சி செய்தோம். அதுவும் நிறைவேறவில்லை. நேரடியாக சந்தித்து இந்த நேரம் வரை ஒப்புதல் தரவில்லை.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனுவை 12 மணிக்கு கொடுத்தோம். மாலை 8 மணிக்கு எல்லாம் பதில் கடிதம் வந்துவிட்டது. வந்த கடிதத்தில், நீங்கள் அனுப்பிய கோரிக்கை மனு நேரடியாக உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அதன் மீது நடவடிக்கை எடுப்பார் என்ற செய்தியுடன் அந்த கடிதம் வந்தது.
அதற்கு பிறகு, உள்துறை அமைச்சர் நம்மை பார்ப்பார், பார்த்து பதில் சொல்வார் என்று நாங்கள் எண்ணிய நேரத்தில் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இது வண்மையாக கண்டிக்கத்தக்கது. நாட்டிலே நடக்கக் கூடாத வகையில், அரசியல் சட்டத்துக்கு விரோதமாக ஆளுநர் நடந்துகொள்கிறார். அதற்கு உள்துறை அமைச்சரும் சம்மதமும் தெரிவிப்பது போல், அவர் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்பதுதான் இன்றைக்கு இருக்கிற செய்தி. இதை வருத்தத்தோடு, உங்களிடம் எடுத்துச் சொல்வதற்கு உங்களிடம் கடமைப்பட்டுள்ளோம். எல்லாக் கட்சிகளும் இதில் ஒன்றிணைந்திருக்கிறது.” என்று கூறினார்.
இதையடுத்து, செய்தியாளர்கள், இன்றைக்கு விசிக உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். திமுக எதுவும் பேசவில்லை. ஆனால், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுவதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு திமுக எம்.பி டி.ஆர். பாலு, “விசிக செய்தது தப்பா என்ன? விசிக செய்ததை தவறு என்று சொல்கிறீர்களா நீங்கள்?” என்று செய்தியாளர்களிம் பதில் கேள்வி எழுப்பினார்.
திமுக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று செய்தியாளர்கள் டி.ஆர்.பாலுவிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு டி.ஆர்.பாலு, “சட்டப்பேரவையில் உரையாற்ற ஆளுநரை அழைத்தது திமுக, ஆளுநர் உரையை எழுதியது திமுக, ஆளுநர் உரை என்ன என்பது உங்களுக்கு தெரியும். என்ன பேசப்போகிறார் என்பது அவருக்கு தெரியும், என்ன நடக்கும் என்பது எல்லா கட்சியினருக்கும் தெரியும் அது பிரச்சனை இல்லை.” என்று கூறினார்.
இதையடுத்து, உள்துறை அமைச்சகம் வேண்டுமென்றே உங்களை சந்திக்காமல் தவிர்க்கிறார்களா? அல்லது அரசியல் காழ்ப்புணர்வால் தவிர்க்கிறார்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு திமுக எம்.பி. டி.ஆர். பாலு, “நீங்கள் இரண்டாவது சொன்ன அரசியல் காழ்ப்புணர்வால் தவிர்க்கிறார்கள் என்று நாங்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம். அரசியல் காரணங்களுக்காக எங்களை சந்திக்க மறுக்கிறாரோ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். அது உண்மையாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம்” என்று கூறினார்.
உள்துறை அமைச்சரை சந்திக்க முடியாத நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு திமுக எம்.பி டி.ஆர். பாலு, “இங்கே தோழமைக் கட்சியான விசிக தலைவர் திருமாவளவன் வந்திருக்கிறார். எதிர்க்கட்சி அதிமுக சார்பிலும் வந்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வந்திருக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.” என்று கூறினார்.
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து ஆளுநர் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த டி.ஆர். பாலு, “இதில் ஆளுநர் வேறு எந்த மாற்று முடிவுகளும் எடுக்கமுடியாது. அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 100, 101 அடிப்படையில், அவர் முடிவு எடுத்தே ஆக வேண்டும். ஷரத்து 200, 201ன் அடிப்படையில் குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பித்தான் ஆக வேண்டும். வேறு வழியெ கிடையாது. அவருக்கு வேறு மாற்று கிடையாது. அதை கையில் வைத்திருக்க முடியாது. எவ்வளவு நாள் கையில் வைத்திருக்க முடியும். அரசியல் சட்டம் தெரிந்தவர், அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பதற்காக டெல்லியில் வந்திருக்கிறார். அவர் தப்பு செய்தால் என்ன ஆகும், ஒட்டுமொத்தமாக, இந்த அரசியல் சட்டப்படி நடக்காத ஒருவர் உண்டென்றால் அது ஆளுநர்தான். இந்த தவறுகளுக்கு ஆளுநர்தான் காரணமாக இருந்திருக்கிறார். இப்படி தவறு செய்கின்ற ஆளுநர், அரசியல் சட்டப்படி நடக்காத ஆளுநர் உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டும். தமிழ்நாட்டு அரசியல் அரங்கில் அவருக்கு ஒன்றும் தகுதியில்லை என்றுதான் நினைக்கிறோம்.” கடுமையாகப் பேசினார்.
திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, அவருடன், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.