தி.மு.க அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல்வேறு தருணங்களில் மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது தி.மு.க அரசின் திராவிட மாடல் கொள்கையை நேரடியாக சாடியுள்ளார். ஆங்கில ஊடகத்திற்கு ஆளுநர் ரவி அளித்த பேட்டியில், “திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். திராவிட மாடல் என்று எதுவும் இல்லை.
காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ‘ஒரே நாடு, ஒரே பாரதம்’ கொள்கைக்கு எதிரானது. இந்த கொள்கை நமது சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள், வரலாற்றை மறைக்க பார்க்கிறது” என்றார்.
மேலும் பேசிய அவர். “ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. ஸ்டாலின் ஒரு நல்ல மனிதர். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவரிடம் நானும் என்னிடம் அவரும் பரஸ்பரம் மரியாதையாகவே நடந்து கொள்கிறோம். தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது.
ஆனால், ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி எல்லை தாண்டி செயல்படுகிறார் என்று தி.மு.க அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டு. அது முழுக்க முழுக்க அபத்தமானது. ஆளுநருக்கு என்று ஒரே ஒரு எல்லை தான் இருக்கிறது. அந்த எல்லை என்பது அரசியல் சாசனத்தால் வகுக்கப்பட்டது” என்று கூறினார்.
இந்தநிலையில், திராவிட மாடல் குறித்தான ஆளுநரின் கருத்துக்கு தி.மு.க அமைச்சர்கள், எம்.பிக்கள் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தி.மு.க அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் தற்போது ஆளுநரின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வில்சன் பதிலடி
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், “2021-ல் “திராவிட மாடல் அரசு” என்ற சித்தாந்தத்திற்கே தமிழ்நாடு மீண்டும் பெருவாரியாக வாக்களித்தது என்பதை மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் உணர்ந்துள்ளாரா?.
இந்த மாநிலத்தின் மக்களையும் அரசியலையும் தனக்குத் தெரியும் என்ற மாயையால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். காலாவதியானது எதுவென்றால் ஆளுநர் பதவி என்பதே பொருத்தமானதாக இருக்கும்!” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“