இந்து பழங்குடியின பெண்கள் சொத்தில் சமபங்கினைப் பெறுவதற்கான உரிமைகள் பரிசீலிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியிருப்பதை மகத்தான வெற்றியாக கருதுகிறேன் என தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார்.
இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் படி இந்து மதத்தை பின்பற்றும் பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சமபங்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை தி.மு.க எம்.பி வில்சன் முன்னெடுத்து வருகிறார். இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களைச் சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தார். இந்தநிலையில், அவரது கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக வில்சன் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: புதுக்கோட்டை ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை உடைபட்டதாக வதந்தி: கலெக்டர் எச்சரிக்கை
இது தொடர்பாக தி.மு.க எம்.பி வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்து பழங்குடியின பெண்கள் சொத்தில் சமபங்கினைப் பெறுவதற்கான உரிமைகள் பரிசீலிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியிருப்பதை மகத்தான வெற்றியாக கருதுகிறேன். இந்து மதத்தைப் பின்பற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு சொத்துக்களின் மீது சமமான பங்குகளைப் பெறுவதற்கு ஏதுவாக, இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் நன்மை பயக்கும் விதிகளைப் பயன்படுத்துமாறு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர்களுடனான எனது சந்திப்பு மற்றும் கோரிக்கைகளைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து பதில் எழுதியுள்ள மாண்புமிகு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால், இந்த விவகாரம் தொடர்பாக பழங்குடியினர் விவகாரத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சமூக நீதித் துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை ஆகியவற்றின் அமைச்சர்களோடு கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும், மேலும், இந்த விவகாரம் அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் பிரிவு III-ன் படி மாநிலப்பட்டியலில் வருவதால் மாநில அரசுகளுடனும் கலந்தாலோசனை தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். பழங்குடியின மகளிருக்கு சம உரிமைகளை வழங்கும் வகையில், அனைத்து தரப்பினராலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.” எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil