தமிழகத்தில் ஒரே நாளில் திமுகவைச் சேர்ந்த 2 எம்.பி.க்களூக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளதால் அக்கட்சியினர் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களான காவல்துறையினர், வருவாய்த்துறையினர் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் திமுகவைச் சேர்ந்த திருநெல்வேலி தொகுதி எம்.பி ஞானதிரவியம், அரக்கோணம் தொகுதி எம்.பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி தொகுதி திமுக எம்.பி ஞானதிரவியத்துக்கு அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே போல, அவருடைய மனைவிக்கும் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அரக்கோணம் தொகுதி எம்.பி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜெகத்ரட்சகனும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"