திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 24-12-2018 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திமுக தங்களது நிர்வாகிகளை கூட்டியிருக்கும் அதே டிச.24ம் தேதி, பகல் 12 மணிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் 2 மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என அந்த ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகளில் ஆலை ஈடுபட்டு உள்ளது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை பற்றி கொள்கை முடிவு எடுக்க எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.