திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி, அவர் வாழ்த்தை யார் கேட்டது, வாழ்த்துச் சொல்லாமலே இருந்திருக்கலாம் என்று தி.மு.க-வின் முரசொலி நாளேடு ஆ.என். ரவியை கடுமையாக தாக்கியுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திருவள்ளுவர் தினத்தன்று காவி உடை அணிந்திருக்கும் விதமாக சித்தரிக்கப்பட்ட திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆளுநர் ஆர்.என். ரவியின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைக் கடுமையாகத் தாக்கி தலையங்கம் எழுதியுள்ளது.
தி.மு.க-வின் முரசொலி நாளேட்டில் இன்று (18.01.2024) வெளியாகி உள்ள தலையங்கத்தில் எழுதப்பட்டிருப்பதாவது: “வந்த வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் பார்க்கிறார் ஆளுந ஆர்.என். ரவி. அவரைச் சுற்றி வளைத்துக்கொண்டு குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது ஆரியக் கும்பல். அந்த கும்பலிடம் சிக்கி இருப்பதால் வலிய வந்து வாயைக் கொடுத்து உடம்பைப் புண்ணாக்கிக் கொள்கிறார் ஆளுநர்.
திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து வாழ்த்து சொல்லி இருக்கிறார் ஆளுநர். அவர் வாழ்த்தை யார் கேட்டது? வாழ்த்துச் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்.
ஆன்மிக பூமியம் தமிழ்நாடு இவர் வந்துதான் அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கிறார். பாரதிய ஜனதா பாரம்பரியத்தின் ‘பிரசாரமான துறவியாம் திருவள்ளுவர். எப்போது வந்தது பாரதிய ஜனதா என்ற பெயர்? இவர் சொல்லும் சனாதனச் சக்கையின் பொருள் என்ன? திருச்சி கல்யாணராமன் சொல்லிக் கொண்டு இருக்கிறாரே அதுதானே? திரிபுவாத உளறல்களுக்கு அளவு இல்லையா?
வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் பாரதம் உண்டா? பாரதியம் உண்டா? சனாதனச் சழக்குகளை அகற்ற வந்தவரே வள்ளுவர் தானே? சில மாதங்களுக்கு முன்பும் திருக்குறளைப் பற்றி இப்படித்தான் வாய்க்கு வந்ததைப் பேசினார் ஆளுநர். “திருக்குறளை ஜி.யு. போப்பின் ஆங்கில மொழி பெயர்ப்பில் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. திருவள்ளுவர் குறிப்பிட்ட தமிழர்களின் ஆதி பகவன் என்கிற ஆன்மிக ஞானத்தை சின்னா பின்னமாக்கும் காலனித்துவ நோக்கத்துடன் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. திருக்குறளில் இருந்த ஆன்மிகத்தை முற்றிலுமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜி.யு. போப் குறிப்பிட்ட மதத்தின் பிரசாரகர் மட்டுமல்ல, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் திட்டங்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டவர். அதே சமயத்தில், தமிழ் அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைப் படிக்கும்போது மகிழ்ச்சியுற்றேன்.” என்று பேசினார். இவருக்கு ஜி.யு. போப்பை கிறித்துவராகச் சொல்ல வேண்டும். அதைச் சொல்லிக் கொச்சைப்படுத்த வேண்டும். அந்த நோக்கத்துக்கு திருக்குறளை சிதைத்தார். ஜி.யு. போப் சிதைத்து விட்டாராம். இவர் தமிழ் அறிஞர்களின் மொழிபெயர்ப்பைப் படித்தாராம். யார் மொழிபெயர்த்ததைப் படித்தார் என்பதைச் சொல்லி இருந்தால் இரண்டுக்குமான வேறுபாடு என்ன என்பதைப் பார்க்கலாம். அதைச் சொல்லவில்லை ஆளுநர்.
உலகப் பொதுமறையாக ஆகிவிட்ட திருக்குறள் உலகின் 200-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. இதனைக் கபளீகரம் செய்யத் துடிக்கிறது ஆரியக் கும்பல். திருக்குறளை ஞானத்தின் ஊற்று. நித்திய ஆன்மிகம். ஞானத்தின் காவியம். தர்மத்தின் கண், ஆதிபகவன், பக்தி, ரிக்வேதம், உலகத்தைப் படைத்தவன் ஆதிபகவன் என்று சொல்வதன் மூலமாக சனாதனக் கூட்டுக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள். இவர்களுக்குள் அடக்க முடியாதவர் திருவள்ளுவர். அது மட்டுமல்ல. சனாதனத்துக்கு எதிராகவே தனது நூலை உருவாக்கினார் திருவள்ளுவர்.
“திருக்குறள் என்பது சமயத்திற்காக தோன்றிய நூலன்று. பிற்காலத்தவர்கள் வடமொழி நான்மறையோடு திருக்குறள் ஒத்தது என்பர் இல்லை. இல்லவே இல்லை” என்றவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அத்தகைய வள்ளுவரைத் தான் பாரதிய சனாதனி என்கிறார் ஆர்.என். ரவி. திருக்குறளை இலக்கியமாக மட்டுமல்லாமல், இயக்கமாகப் போற்றி பரப்பிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ் அமைப்புகளை குறளை நெறியாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள். திருவள்ளுவரை வழிகாட்டியாகப் போற்றினார்கள். அப்போது திராவிட இயக்கம் தான் திருவள்ளுவருக்கு அரசியல் சமூக முகம் கொடுத்தது. திருக்குறள் மாநாடுகளை நடத்தியது. திருக்குறளை மலிவு விலைப் பதிப்பாகப் போட்டு விற்பனை செய்தார் தந்தை பெரியார்.
ஆரியரல்லாத இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறப்பாக இந்நாட்டு பழங்குடி மக்களான திராவிடர்கள் அனைவருக்கும் வள்ளுவர் அருளிய திருக்குறள் ஒரு பெரிய செல்வமேயாகும். நமது பெருமைக்கும், நெறிக்கும் (மதத்துக்கும்), நாகரிகத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில பல சங்கதிகளை நாம் காணலாம். திருக்குறளின் பேரால், நம் பெருமையை திராவிடரல்லாத மக்களுக்கு உணரச் செய்ய முடிகிறது. நமது சரித்திரத்திற்கும் நாகரிகத்திற்கும் பல இலக்கியங்களிலிருந்தும் பல காரியங்களிலிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்ட முடியுமாயினும் அவை பெரும்பாலும் பண்டிதர்களுக்குத் தான் புரியும். அவர்களுக்குத் தான் பயன்படும். ஆனால், திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மைக்கு ஏற்ற ஆதாரமாய் அமைந்திருக்கிறது” என்று 1948 ஆம் ஆண்டு பேசியவர் தந்தை பெரியார்.
தெய்வீகத் தன்மையை வள்ளுவருக்கு தந்துவிடக் கூடாது. திருக்குறளை உண்டாக்கியவரின் உண்மைப் பெயர் மறைக்கப்பட்டு விட்டது. திருக்குறள் திராவிடநூல். இதனை நன்றாக மனதில் பதிய வையுங்கள். ஆரியக் கொள்கைகளை மடியச் செய்ய எழுதப்பட்ட நூல் திருக்குறள். புத்தர் செய்த வேலையை திருக்குறள் செய்துள்ளது. திருக்குறளை நான் ஆராய்ச்சி செய்தவனல்ல; ஆனால், பெருமையை உணர்ந்துள்ளவன் என்று பேசிய பெரியார். இதனை பாடத்தில் சேர்க்க வேண்டும் என்றார். திருக்குறளை மூன்றாகப் பிரித்து எளிதில் புரியும் குறளை கீழ் வகுப்புகளுக்கும் கடினமானதை நடுத்தர வகுப்புக்கும், அதன்பிறகு உள்ளதை மேல் வகுப்புக்கும் வைத்தால் பள்ளிகளால் மதப்படிப்போ, ஒழுங்குப்படிப்போ தனியாக வேண்டுவதில்லை என்றார். மாணவர்களின் பரீட்சைக்குள் திருக்குறளை உணரும்படி செய்துவிட்டால் எவ்வளவோ நன்மை என்றார். திராவிடர் கழக மாநாடுகளில் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்தார்” என்று முரசொலில் தலையங்கத்தில், ஆளுநர் ஆர்.என். ரவியைக் கடுமையாகச் சாடியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.