முரசொலி இடம், பஞ்சமி நிலமா? என்பது தொடர்பான சர்ச்சை சூடு பிடித்திருக்கிறது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் இடையே அறிக்கை யுத்தம் தொடர்கிறது. அந்த இடத்தில் ஆதிதிராவிடர் நலப் பள்ளி இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார் ராமதாஸ்.
சென்னை தேனாம்பேட்டையில், திமுக.வின் தின இதழான முரசொலி அலுவலகம் இருக்கிறது. அண்ணா அறிவாலயத்தையும், முரசொலி அலுவலகத்தையும் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி தனது இரு கண்களாக பாவித்து வந்தார். அந்த முரசொலி வளாகத்தின் உரிமை தொடர்பாகத்தான் இப்போது சர்ச்சை!
இடைத் தேர்தல் பிரசாரத்திற்காக நாங்குனேரி சென்றிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் அசுரன் திரைப்படத்தை திமுக நிர்வாகிகளுடன் சென்று பார்த்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கான பஞ்சமி நில மீட்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்தப் படத்தை வெகுவாகப் புகழ்ந்து மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு பதில் கொடுத்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், ‘பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!’ என கூறியிருந்தார்.
இதற்கு ட்விட்டரிலேயே பதில் தெரிவித்த மு.க.ஸ்டாலின், ‘மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா - மனை!’ எனக் கூறி, அந்தப் பட்டா நகலையும் ட்விட்டுடன் இணைத்திருந்தார்.
தவிர, அது பஞ்சமி நிலம் என டாக்டர் ராமதாஸ் நிருபித்தால் அரசியலை விட்டு விலகுவதாகவும், நிரூபிக்காத பட்சத்தில் ராமதாஸும், அவரது மகனும் அரசியலை விட்டு விலகுவார்களா? என சவால் விட்டிருந்தார் ஸ்டாலின்.
இந்தச் சூழலில் இன்று (அக்டோபர் 19) ராமதாஸ் மீண்டும் இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், ‘முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?
முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?
முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?
நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை!’ என ராமதாஸ் கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம், அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.