முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பா.ஜ.க அளித்த புகாரில், மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தை அறிவுறுத்துவதாக மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி. இதன் அலுவலகம் கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று பா.ஜ.க மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து, முரசொலி அறக்கட்டளை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புதிதாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் மேற்கொண்டு விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தேசிய பட்டிலினத்தோர் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்து, முரசொலி அறக்கட்டளை மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபடி அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும் என தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, தி.மு.க தரப்பில், இதே விவகாரம் தொடர்பாக மற்றொரு வழக்கில், ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு, இந்த சொத்து பஞ்சமி நிலம் அல்ல என்று 2019-ம் ஆண்டு தெரிவித்துவிட்டதாகவும் விளக்கம் அளித்தது.
மேலும், இந்த சொத்தின் உரிமை குறித்து ஆணையம் விசாரிக்கலாம் என்று ஏற்கெனவே தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதால், ஒரு இடைக்கால உத்தரவை இன்றைய தினமே பிறப்பிக்க வேண்டும் என தி.மு.க தரப்பில், ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது, மத்திய அரசைப் பொறுத்தவரைக்கும், இந்த விவகாரத்தில் எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்துக்கு அறிவுறுத்துவதாக ஆணையம் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் உறுதி அளித்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மீண்டும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“