சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தி.மு.க-வின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என குற்றம்சாட்டி, தமிழ்நாடு பாஜக செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டு கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 14 மற்றும் டிசம்பர் 13ம் தேதிகளில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்யக் கோரி முரசொலி அறக்கட்டளை சார்பில் 2020ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Advertisment
இந்த வழக்கு நீதிபதி அனிதாசுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "அரசியல் உள்நோக்கத்தோடு இந்தப் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக புகார் அளித்துள்ள சீனிவாசனும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய அப்போதைய துணை தலைவர் எல்.முருகனும் (தற்போது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர்) பாஜகவைச் சேர்ந்தவர்கள்" எனவும் தெரிவித்தார்.
மேலும், "தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக யாரேனும் புகாரளித்தால், இதுபோன்று விசாரணை நடத்துவார்களா? இந்த புகாரை விசாரிக்க தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை. மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஆணையத்தின் தலைவர் சார்பில் இதுவரை பதில் மனுகூட தாக்கல் செய்யப்படவில்லை" என்றும் வாதிட்டார்.
அப்போது ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்த விவகாரத்தை நாங்கள் அரசியலாக்கவில்லை. மனுதாரர் தரப்புதான் அரசியலாக்குவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் இதுவரை ஏன் பதில்மனு தாக்கல் செய்யவில்லை? என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஆணையத் தலைவர் இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil