Advertisment

நீதிபதி ஜெயச்சந்திரன் அ.தி.மு.க ஆட்சியில் சட்டத் துறை செயலாளராக இருந்தார்: தி.மு.க புகார்

பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, தி.மு.க சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். 

author-image
WebDesk
New Update
NR Elango Ponmudi

என்.ஆர். இளங்கோ - பொன்முடி

Listen to this article
00:00 / 00:00

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சராக இருந்த தி.மு.க மூத்த தலைவர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அ.தி.மு.க ஆட்சியில் சடத்துறை செயலாளராக இருந்துள்ளதால், அவர் இந்த வழக்கை விசாரித்து இருக்கக் கூடாது தி.மு.க சட்டத் துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ புகார் தெரிவித்துள்ளார்.

Advertisment

வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று அறிவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வியாழக்கிழமை (21.12.2023) தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பின் மூலம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, பொன்முடி தனது அமைச்சர் பதவியையும் எம்.எல்.ஏ பதவியையும் இழந்தார். 

பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, தி.மு.க சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ வியாழக்கிழமை (21.12.2023) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். 

என்.ஆர். இளங்கோ கூறியதாவது: “2006 – 2011 ஆம் ஆண்டு காலத்தில் பொன்முடி அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் எண்ணத்தோடு தொடரப்பட்ட வழக்கில் கீழ் நீதிமன்றத்தில் விடுதலை கிடைத்தது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் , விசாரனை நிறைவு பெற்று கீழமை நீதிமன்றம் கொடுத்த உத்தரவை ரத்து செய்து குற்றவாளி என்று தீர்ப்பளித்து, தண்டனை காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனை வருட பழைய வழக்கு என்பதாலும், வயோதிக காரணத்தாலும் , கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது அதை உயர்நீதிமன்றம் மாற்றி எழுதியுள்ளது போன்ற காரணங்களால் 3 வருட சாதாரண சிறை தண்டனையும் , தலா 50 லட்சும் ருபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவற்கு 30 நாட்கள் சிறை தண்டனையை நிறுத்து வைத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அதில் அவர் விடுதலை செய்யப்படுவார். அவரது துணைவியார் அவர்கள் பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்தி  வருடத்திற்கு 5 கோடி ருபாய் அளவிற்கு வருமானம் வருவதாக கணக்குகள் காட்டப்பட்டுள்ளது.

பொன்முடியின் துணைவியார் அவர்கள்  குறித்த நேரத்தில் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யவில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறி தான் கீழமை நீதிமன்றம் கொடுத்த விடுதலையை ரத்து செய்துள்ளனர்.

1996 – 2001 காலகட்டத்திலும் பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் ஆதாரங்களை பார்த்தால் , பொன்முடிக்கு குடும்ப சொத்தாக 100 ஏக்கர் சித்தூரில் இருந்ததும் , தொழிலை ஆரம்பிக்கும் போது பொன்முடியின் சகோதரர்கள் பெரும் அளவிற்கு முதலீடுகளை கொடுத்ததும் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் , சாட்சியங்கள் அடிப்படையில் மிக லாபகரமாக பொன்முடியின் மனைவி தொழிலை நடத்தி வந்தார் என்பதும் ,  வருடத்திற்கு 5 கோடி அளவிற்கான வியாபராம் செய்து வந்துள்ளார் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறித்த நேரத்தில் வருமான வரி செலுத்தவில்லை என்ற காரணம் தான் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறி விடுதலையை ரத்து செய்து தண்டனையை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. திமுக சட்டத்துறை சார்பில் மேல்முறையீடு செய்து விடுதலை பெற்றுத்தரப்படும்.

நீதிபதி என்பவர் எந்த சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர். ஆனால் சட்டத்தின் அடிப்படையில் , அதிமுக ஆட்சியின் போது அவர் சட்டத்துறை செயலாளராக பணியாற்றினார். அப்போது இந்த வழக்கில் இந்த சொத்துகளை முடக்கம் செய்வதற்கான கோப்புகளை அவர் கையாண்டுள்ளார். இந்த வழக்கு நடக்கும் போது அது தெரியவில்லை , நேற்றைக்கு தான் பொன்முடி அவர்களுக்கு தெரிய வந்தது.  அதை நீதிபதி அவர்களிடம் எடுத்து சொன்னோம். அப்போது நீதிபதி சொல்லும் போது, முன்னரே இதை தெரியப்படுத்தியிருந்தால்கூட இந்த வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன் என கூறினார். இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த ஒரு பிரச்சனை. அந்த பிரச்சனையை நாங்கள் நிச்சயம் உச்சநீதிமன்றத்திலும் எடுத்து வைப்போம்.

இந்த வழக்கின் புலன் விசாரனை அதிகாரியை குறுக்கு விசாரனை செய்யும் போது , திரு பொன்முடி அவர்களின் வருமானத்திற்கும் , அவரது மனைவியின் வருமானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும்  , இந்த சொத்துகள் திரு பொன்முடி அவர்களின் வருமானத்தின் அடிப்படையில் வாங்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கீழமை  நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.  அதன் அடிப்படையில் தான் கீழமை நீதிமன்றம் இந்த வழக்கில் விடுதலை செய்தது. தற்போது கூட , குறித்த நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யவில்லை அது சந்தேகத்தை எழுப்புகிறது என்று தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆவணங்களின் அடிப்படையில் பொன்முடி அவர்களின் மனைவிக்கு வருடத்திற்கு 5 கோடி ருபாய் அளவிற்கு வருமானத்தை ஈட்டும் தொழில் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளோம். குறித்த நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என கூறியிருக்கும் நிலையில் , உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உரிய நீதியை பெறுவோம்.

கொடுக்கப்பட்டிருக்கும் 30 நாட்களில் மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவோம். மேலும் , இந்த தண்டனையை நிறுத்தி வைக்க முயற்சி செய்வோம் . அப்படி உச்சநீதிமன்றம் சார்பில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் தகுதி இழப்பு என்பது இல்லாமல் ஆகிவிடும்.

திமுக மிக பலமாக இருக்கிறது , அதை கண்டு பாஜக பயப்படுகிறது என்பது தான் எதார்த்தம். 2024-க்கு பிறகு பாஜக வை சேர்ந்தவர்களின் பட்டியல்களும் வெளிவரும்.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ponmudi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment