scorecardresearch

அரசியலில் யார் தான் புனிதர்? அதிர வைத்த கே.என் நேரு

கே.என்.நேரு புனிதரா என கேட்கிறார்கள். அரசியலில் யார் தான் புனிதரா இருக்கிறார்கள். ஏற்கனவே என் மீது 19 வழக்குகள் பதியப்பட்டது.

அரசியலில் யார் தான் புனிதர்? அதிர வைத்த கே.என் நேரு

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பொன்மலைப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர் பாலு, திமுக முதன்மைச் செயலாளரும்,  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என் நேரு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒவ்வொரு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் பணியில் அனைத்து அமைச்சர்களும் பணியாற்றி வருகிறார்கள். தமிழ் இனத்தை பாதுகாக்க குரல் கொடுக்கும் தலைவரை நாம் பெற்றுள்ளோம்.

இந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் எனக்கு இரண்டு திட்டங்கள் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்கிற அறிவிப்பு, மற்றொன்று 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரன பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. எந்த தேர்தலாக இருந்தாலும் மக்கள் எங்கள் பக்கம் தான் என்பதை நிருபிப்போம் என்றார்.
தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கம் குறித்து சிறப்புரையாற்றிய திமுக முதன்மைச்செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு பேசுகையில், மே தினத்தன்று திருவெறும்பூரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குமாரை ஒரு பிடி பிடித்தார்.  

மேலும் அவர் பேசுகையில்; திமுக ஆட்சியமைத்த ஓராண்டில் திருச்சியை சார்ந்த நான் 100 கோடி ரூபாய் சம்பாதித்து விட்டதாகவும், கல்லூரி கடனை அடைத்து விட்டதாகவும், 200 ஏக்கர் நிலம் வாங்கி குவித்திருப்பதாகவும் என்மீது அபாண்டமாக எதிர்கட்சியை சார்ந்த ப.குமார் குற்றம் சாட்டுகின்றார்.
  நான் அவ்வாறு சம்பாதிக்கவில்லை. 200கோடி ரொக்கம் இருந்தால் அதை நிரூபித்து வழக்கு போடுங்கள், அரசே அதை எடுத்துக்கொள்ளட்டும். அப்படியே சம்பாதித்தாலும் அது மக்களுக்காக தான் செலவழிக்கப்படும்.

கே.என்.நேரு புனிதரா என கேட்கிறார்கள். அரசியலில் யார் தான் புனிதரா இருக்கிறார்கள். என்னை நீதிமன்றத்தில் சந்திக்கிறோம் என்கிறார்கள். ஏற்கனவே என் மீது 19 வழக்குகள் பதியப்பட்டது. அதிலிருந்து வெளியே வந்து பல்வேறு வழக்குகளில் உண்மையை நிரூபித்துதான் நான் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கின்றேன்.

எதிர்கட்சி பிரமுகர் திமுகவையும், என்னையும் விமர்சிப்பதற்கு முன்பு முதலில் உங்கள் சொந்தக் கட்சி பிரச்சனையை சரி செய்யுங்கள். என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றேன் என்றார்.

மேலும், அவர் பேசுகையில், தி.மு.க அரசு பொறுப்பேற்றபோது 5 லட்சம் கோடி ரூபாய் கடனாக இருந்தது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நான்கு மாதங்கள் கொரோனா, அதன் பின்பு வெள்ளம், அதன் பின்பு சட்டமன்ற கூட்டத்தொடர் இருந்தது மீதமிருந்த சில மாதங்களில் தான் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் 850 கோடியில் புதிய பேருந்து முனையம், மார்கெட் 120 கோடி ரூபாயில் கூட்டு குடிநீர் திட்டம், தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இது போன்ற எண்ணற்ற பணிகளை செய்து வருகிறோம்.

திருச்சி மாவட்டம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி பெறும். சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி என்கிற நிலைக்கு மாவட்டத்தை உயர்த்துவோம்.நாங்கள் நிச்சயம் நேர்மையாக தான் பணியாற்றுவோம், எந்த தவறும் செய்ய மாட்டோம் என உறுதியாக தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dmk one year complete function trichy kn nehru speech