Advertisment

பொது சிவில் சட்டத்தால் மதச் சார்பின்மைக்கு குந்தகம்: சட்ட ஆணையத்திற்கு தி.மு.க கடிதம்

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தனிமனித உரிமைகளை பறிப்பது ஏற்புடையதல்ல.

author-image
WebDesk
New Update
Duraimurugan

DMK oppose Uniform civil code

மத அடிப்படையிலான தனிச் சட்டங்கள், பரம்பரை விதிகள், தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றை மாற்றியமைத்து, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

Advertisment

மேலும் இந்த சட்டம் தொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சிகளிடம் இருந்து கருத்தும் கேட்டுள்ளது.

பொது சிவில் சட்டத்துக்கு காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய சட்ட ஆணையத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை பிரிவு 25-ன்படி குடிமக்கள் அனைவரும் தாங்கள் சார்ந்துள்ள மத வழக்கங்களைப் பின்பற்றவும், பரப்பவும் உரிமை பெற்றவர்களாவர். இத்தகைய வேறுபாடுகள் நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை வலிமையாக்கி உள்ளது.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் 'பொது சிவில் சட்டத்தை' அறிமுகப்படுத்தும் முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச் சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படுத்துவதுடன், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகளை இந்திய சமுதாயத்தில் உருவாக்கும் நிலை ஏற்படும்.

பொது சிவில் சட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் வலிமையாக எதிர்க்கிறது.

காரணம், இந்தச் சட்டம் தனிநபர் உரிமையான எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியள்ள உரிமைகளை பறிப்பதற்கும், பிரிவு-29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும்.

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தனிமனித உரிமைகளை பறிப்பது ஏற்புடையதல்ல.

தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் மதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பொது சிவில் சட்டம் இத்தகைய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வாய்ப்பு உள்ளது.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது உலக நாடுகளே வியந்து பாராட்டும் நாடு, நமது இந்திய நாடு என்பதை ஒன்றிய அரசு மறந்துவிடக் கூடாது. எனவே, 22வது சட்ட ஆணையம் 21வது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் கூறுகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment