நாடாளுமன்ற மாநிலங்களவையில் புதன்கிழமை (டிச.6) நாட்டின் பொருளாதார சூழ்நிலை குறித்து நடைபெற்ற குறுகிய கால விவாதத்தில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பங்கேற்று விவாத்தார்.
அப்போது அவர், “பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் ஒரு நாடாக இந்தியா இருந்து வருகிறது. 6-வது பெரிய பொருளாதார நாடாக தற்போது இருக்கிறது.
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி.யும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் மாநிலத்துக்கான பங்கு கிடைக்காமல் மாநிலங்கள் அவதிப்படுகின்றன. எனவே, மத்திய அரசு அதை உடனே வழங்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, “ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் பொருளாதார பாதிப்புகள் இருந்த நிலையிலும் அவர்களால் நலத்திட்டங்களை செயல்படுத்த முடிந்தது.
எடப்பாடி பழனிசாமியும் கொரோனா காலக்கட்டத்தில்கூட மிக திறமையாக வழிநடத்தினார். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.2500 பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் “அது செயற்கை வெள்ளம், தற்போதுள்ளது இயற்கை வெள்ளம்” என சொல்கிறார். எனக்கு இது ஒன்றும் புரியவில்லை.
புயல் மழையை எதிர்கொள்வதில் தற்போதுள்ள தி.மு.க. அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டது, சென்னையில் ரூ.4500 கோடிக்கு நடந்த மழைநீர் வடிகால் பணிகளில் தோற்றுவிட்டது என்பது புரிகிறது.
அந்த பணம் எங்கே போனது? என தெரியவில்லை. (அப்போது தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்குரல் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து தம்பிதுரை…)
தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது. மழை வெள்ளத்தில் மக்கள், குறிப்பாக சென்னை மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மழை வெள்ளத்தை கையாளுவதில் தி.மு.க அரசு செயலற்று போய்விட்டது.
நிவாரணத்துக்காக அவர்கள் ரூ.5 ஆயிரம் கோடி கேட்கிறார்கள். ஆனால் மழைநீர் வடிகாலுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.4500 கோடி எங்கே போனது? என்று நான் கேட்கிறேன். இதற்கு யார் பதில் தருவார்?” என்றார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் மழை நீர் மட்டும் ஓடவில்லை; சாராயம், கஞ்சாவும் ஓடுகிறது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“