வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அடுத்த நாகல் கிராமத்தைச் சேர்ந்தவர் விட்டல் குமார். இவர் பா.ஜ.க-வின் ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். கடந்த 16-ஆம் தேதி மாலை சென்னாங்குப்பம் பகுதியில் விட்டல் குமார் சடலமாக மீட்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வேலூர் அரசு மருத்துவமனை அருகே பா.ஜ.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக கே.வி. குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அரசியல் விவகாரத்தால் விட்டல் குமார் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
வேலூர், நாகல் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக, தி.மு.க-வைச் சேர்ந்த பாலா சேட் என்பவர் பதவி வகித்து வருகிறார். இவரது ஊராட்சியில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டி அதிகாரிகளுக்கு விட்டல் குமார் கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, கூலிப்படையை ஏவி விட்டல் குமாரை கொலை செய்ததாக பாலா சேட் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனடிப்படையில், பாலா சேட் மற்றும் அவரது மகன் தரணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, கொலை செய்த கூலிப்படையினர் தலைமறைவாக இருந்த நிலையில், அவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், வேலூர் காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விட்டல் குமாரை கொலை செய்த வழக்கில் கமலஹாசன் மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய இருவர் சரணடைந்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
விட்டல் குமாரை கொலை செய்தால் இருவருக்கும் தொகுப்பு வீடு கட்டித் தருவதாக தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் கூறியதாக இருவரும் தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். விட்டல் குமாரை கொலை செய்து விட்டு பாலா சேட்டிடம் தகவல் கூறியதாகவும், அவர் ரூ. 7,500 கொடுத்து தலைமறைவாகும்படி அறிவுறுத்தியதாகவும் சரணடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொலை வழக்கில் பாலா சேட்டின் மற்றொரு மகனாக ராஜேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் ஆகிய இருவரும் தற்போது தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி இரு கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“