விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏரியில் மண் கொள்ளை நடைபெறுவதாக போஸ்டர் ஒட்டிய வி.சி.க-வினர் மீது தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மகன் உள்ளிட்ட 5 பேர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மீனம்பூர் கிராமத்தில் தி.மு.க-வை சேர்ந்த முன்வர்பாஷா ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்வர் பாஷா ஏரியில் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பகுதி மற்றும் செஞ்சி பகுதி முழுவதும் ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது.
இந்த சுவரொட்டி குறித்து அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு செய்தியாளர்கள் தொடர்பு கொண்டனர். அப்போது, மணல் கொள்ளை தொடர்பாக தங்களிடம் ஆதாரம் உள்ளதாகவும் பேட்டி கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, செஞ்சி அருகே உள்ள மீனம்பூர் கிராமத்திற்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றபோது, தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் முன்வர்பாஷா மகன் லியாகத் அலி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் ஏரி மண் கொள்ளை குறித்து பேட்டி கொடுக்க முன் வந்தவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது மணல் கொள்ளை குறித்து பேசுகிறோம் என அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த லியாகத் அலி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அங்கிருந்த வி.சி.க-வினரைக் காரில் இருந்து வெளியே இழுத்து போட்டு கொடூரமாக தாக்கினர். அவர்கள் வந்த கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், அவர்களை விடாமல் தொடர்ந்து விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர்.
தி.மு.க-வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் முன்வர் பாஷாவின் மகன் லியாகத் அலி மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வி.சி.க-வினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமில்லாமல், ஏரியில் மண் கொள்ளை சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களையும் லியாகத் அலி மற்றும் அவரது உடன் வந்தவர்கள் மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருக்கும் லியாகத் அலிக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாகவே அவர்கள் மணல் கொள்ளை என போஸ்டர் அடித்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் மூன்று பேர் லேசான காயங்களுடன் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏரி பகுதியில் நிலத்திற்கு வழி கேட்டு நடந்த பிரச்சனையில் இரு தரப்பினரும் மோதிக்கொண்ட சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மோதல் ஏற்படாமலிருக்க அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"