திமுக அனைத்து நிர்வாகிகள் கூட்டம் : திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில், இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் கலைஞர் அரங்கில் அனைத்து நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவைச் சேர்ந்த மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற தொகுதி கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று காலை சரியாக 10 மணி அளவில் நடைபெற்ற கூட்டத்தில் கஜா புயலால் இறந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திய கட்சி நிர்வாகிகள்
திமுக அனைத்து நிர்வாகிகள் கூட்டம் : நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. கஜா புயல் நிவாரணம் மற்றும் கடன்கள் தள்ளுபடி
கஜா புயலால் வடக்கு தமிழக கடற்கரை மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாகியது. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட இழப்பின் காரணமாக, பொதுமக்கள் அதிக வேதனையில் இருக்கின்றனர். எனவே அங்கு வாழும் மக்களின் விவசாயக் கடன், மாணவர்களின் கல்விக்கடன், மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், அம்மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை கால தாமதம் ஏற்படுத்தாமல் வழங்கிடவும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொண்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. மேகதாது அணை கட்ட தந்த அனுமதியை ரத்து செய்தல்
காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக, இரட்டை தடுப்பணை கட்ட, கர்நாடக அரசு ஆயத்தமாகி வருகிறது. மேகதாது அணையின் வரைவிற்கு ஒப்புதழ் அளித்துள்ளது பாஜக அரசு. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் காவிரி ஸ்கீமை அரசு இதழில் வெளியிட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்காமல் இருப்பதற்உம் கண்டனங்கள் வெளியிட்டனர். மத்திய அரசு, மேகதாது அணை கட்ட அளித்த ஒப்புதழை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கூறி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுதல் குறித்த ஆலோசனைகளும் இன்று நடைபெற்றது. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, தேர்தல் அறிக்கை தயார் செய்வது, சாதக பாதகங்களை அறிந்து கொள்வது குறித்தும் தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
கூட்டம் முடிவுற்ற பிறகு, செய்தியாளர்களை சந்தித்த முக ஸ்டாலின், வருகின்ற ஜனவரி மாதம் 3ம் தேதி முதல், கிராமசபைகள் மூலமாக மக்களை சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார்.